மலையக மக்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல புரட்சிகரமான செயல் திட்டங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் செயற்படுத்துவதாக அந்நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.
அண்மையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கும் பெருந்தோட்ட தேசிய கல்வியல் நிலையத்திற்கும் இடையிலான சந்திப்பு நிதியத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா மற்றும் பணிப்பாளர்களும் கல்வியகத்தின் தலைவர் புஷ்பிக்க சமரக்கோன், பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாத் தர்மசேன மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
பெருந்தோட்ட தொழில்துறையில் ஆரம்ப காலங்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் காணப்பட்ட போதிலும். தற்போது வெறும் 1,00,000 தொழிலாளர்களே உள்ளனர்.
இதற்கான பிரதான காரணமாகத் தொழில் துறையில் காணப்படும் வேதனக் குறைவு, வசதி வாய்ப்புக்களின் தட்டுப்பாடு, மற்றும் நவீனமடைந்து வரும் வேலை வாய்ப்புக்கு ஏற்ப தொழிற்துறை மாற்றம் அடையலாம். மிக முக்கியமாக தொழில் துறையில் இளம் தலைமுறையினர் கொண்டுள்ள புரிதல் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கண்ணியம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதனாலேயே ஏறக்குறைய கடந்த இரண்டு வருடங்களில் தொழில் துறைகளின் தொழிலாளர்களின் அளவு ஏறக்குறைய 60 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் புதிய வாழ்வு வீடமைப்பு திட்டத்தின் கீழ் 138 வீடுகள் இந்த பொருளாதார சவாலான காலப் பகுதியிலும் நிறைவு செய்யப்பட்டடுள்ளன. அதில் 30 வீடுகள் நானுஓயா கிளேரெண்டனில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாது. பல்வேறு காரணிகளால் தடைப்பட்டிருந்த இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 10,000 வீட்டுத் திட்டங்களையும் அமைச்சரின் தலைமையில் ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொருளாதார சவால்களையும் தாண்டி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் 882 மில்லியனுக்கும் அதிகமான ரூபா நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான குடிநீர்த் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. மேலும் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடையும் விதத்தில். 1752 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குடிநீர்த் திட்டங்கள் தற்சமயம் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி 50 மில்லியனுக்கும் அதிகமான செலவில் பாடசாலை மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் மலசலகூட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.