நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று (24) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இதன்படி, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
—–
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
——
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் நேற்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டம், 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமாக நேற்று (23) முதல் அமுலுக்கு வருகின்றன.