பிளவுபட்டுள்ள கூட்டமைப்பை ஒன்றிணைக்க வேண்டும்

பிளவுபட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஒன்றிணைக்க தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. இராதாகிருஷ்ணன் எம்.பி சபையில் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் சிறிதரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், பிளவு பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பிரச் சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்ற விடயம் பேசப்படுகிறது. இவ்விடயத்தில் மலையக பெருந்தோட்டத்துறை விவசாயிகளையும் கவனத்திற்கொண்டு அவர்களுக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை தனது பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூகவலைத்தளங்கள் இன்றி இன்று எதுவுமே இல்லை. இதில், சில நல்லவைகளும் கெட்டவைகளும் இடம்பெறுகின்றன. இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவற்றில் நல்லவைகளுக்கு நாம் அனுசரணையாக இருப்பது சிறந்தது.

எனினும், சமூக ஊடகங்களை முடக்க, கட்டுப்படுத்த இதன் மூலம் நடவடிக்கை எடுப்பது சிறந்ததல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts