மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
——
பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 47. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்படும் என தெரிகிறது.
பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது: “மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின்…
மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’ ‘மை பிரண்ட்’ , ‘பிர் மிலேங்கே’ ஆகிய இந்திப் படங்களுக்கும் தமிழில் ‘இலக்கணம்’, ‘அமிர்தம்’ உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
——–
“மிகவும் நொறுங்கிப்போயிருக்கிறேன். பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியுள்ள ஆடியோவில், ‘மாரிசன்’ படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்து விட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை. 47 வயசு பெண். இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்துக்கொண்டாரே எனக் கதறி அழுதுவிட்டேன்.
பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நொறுங்கிப்போயிருக்கிறேன்.
இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மேல என்னால பேச முடியலை” என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
——
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
“பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, எம்.பி. அவர்களின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி ராஜா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரணி அவர்கள். வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரணி அவர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பவதாரணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா அவர்களுக்கும், அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.