அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பலவீனமானவர் திறமையற்றவர் என்ற வாதத்தை முன்வைத்துவரும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிலைமை அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்றது எனவும் தெரிவித்துவருகின்றார்.
அமெரிக்கா தன்னை காப்பாற்றுவதற்கு அவசியமான வலுவான நபராக டிரம்ப் தன்னை முன்னிறுத்திவருகின்றார்.
நெவெஸ்டாவில் ஆற்றிய உரையில் பைடனின் எல்லை கொள்கைகளை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.இதன் காரணமாக எந்நேரத்திலும் தேசிய பாதுகாப்பு பேரழிவொன்று இடம்பெறலாம் என டிரம்ப் தெரிவி;த்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற விடயங்களால் அமெரிக்காவில் பாரிய பயங்கரவாத தாக்குதலி;ற்கான ஆபத்துள்ளது பல தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கில் மூன்று அமெரி;க்க படையினர் கொல்லப்பட்ட விடயத்தையும் முன்னாள் ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றார்.
இதற்கான காரணம் பைடன் என குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் பைடனின் போதிய வலிமையின்மையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால் தற்போதைய யுத்தங்கள் ஒருபோதும் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ள அவர் உலகம் முழுவதும் அமைதி நிலவியிருக்கும் ஆனால் தற்போது நாங்கள் மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் நிற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.