நாட்டில் கல்வி,சுகாதாரம் போன்றவற்றுக்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்க முடியாவிட்டாலும் மக்களை அடக்குவதற்காக கண்ணீர் புகை, இறப்பர் தோட்டாக்கள், நீர் தாரை தாக்குதலை நடத்தும் இயந்திரம் வாங்குவதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவைக் கூட வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மக்கள் அடக்குமுறைக்குட்படுத்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பாடசாலை மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போக்கு வரத்து வீதி ஒழுங்குத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் இவ்வாறு செய்யும் போது, 31 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலும் அதன் பிறகும் ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை,காலி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக 17 பாடசாலைகளுக்கு 17 ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குகின்றது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உண்மையான இலவச கல்வியின் அர்த்தப்பாட்டை நனவாக்குவதே இதன் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 74 ஆவது கட்டமாக,மாத்தறை, கொம்பத்தன விஜயபா கனிஷ்ட வித்தியலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் புதன்கிழமை (31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
88 மற்றும் 89 இல் ஏற்பட்ட பாரிய உள்நாட்டு கிளர்ச்சிகள் காரணமாக அப்போதைய ஜனாதிபதி இளைஞர் ஆணைக்குழுவை நியமித்தார்.
அமைச்சர் ஜி.எல். பீரிஸும் அதன் அங்கத்தவர்களில் ஒருவராவார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், நகரத்துக்கு ஒரு கவனிப்பும், கிராமத்துக்கு வேறு ஒரு கவனிப்புமே இளைஞர்களின் அமைதியின்மைக்குக் காரணம் என அடையாளப்படுத்தின.
இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து, கிராமப்புறங்களில் கல்வி அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது.
என்றாலும் இது 1993 வரை மட்டுமே முன்னெடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று 220 இலட்சம் மக்களும் நாட்டில் நிலவும் பொருளாதார,சமூக,அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்காக காத்திருக்கின்றனர்.இவ்வாறான தீர்வுகளை வழங்கக்கூடிய குழு யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் நாடகங்களுக்கு ஏமாற வேண்டாம், நாட்டுக்கு தீர்வுகளும் பதில்களுமே தேவை. அதிகாரம் இல்லாமல் முழு நாட்டிற்கும் சேவை செய்த ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே என்றும்,முன்னைய எதிர்க்கட்சிகளோ அல்லது தற்போதைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளோ இவ்வாறான சேவையை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் 9 மாகாண சபைகளை மையமாகக் கொண்டு 9 புதிய தாதியர் கல்லூரிகளை ஆரம்பித்து,இதை அரச தனியார் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்துவோம். இதனூடாக உயர்தர தாதியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறந்த வாழ்க்கை தரத்தை உருவாக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே,நாட்டை புதிய தொழில்நுட்ப புரட்சிக்கும்,புதிய கல்வி முறையின் மூலம் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் யுகத்திற்கும் இட்டுச்செல்லும் பாரிய அபிவிருத்தி பயணத்தின் முன்னோடிகளாக மாறுவதற்கு அனைவரையும் தயாராகுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.