‘2 சைரனுக்கு இடையில் நடக்கும் மோதல்!

“விஸ்வாசம், இரும்புத்திரைன்னு ஆறேழு படங்களுக்கு ரைட்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். நான் வேலை பார்த்த படங்களுக்கு ரூபன் சார்தான் எடிட்டர். ஒரு கதை டிஸ்கஷனுக்காக அவர் ஆபீஸ் போனேன். அவர்கிட்ட பேசிட்டிருக்கும்போது நானும் தனியா படம் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கேன்னு சொன்னேன். அப்ப, ‘ஜெயம் ரவி சாருக்கு உங்கக் கதை செட்டாகுமா’ன்னு கேட்டார். புதுசா இருக்கும்னு சொன்னேன். உடனே தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருக்கு போன் பண்ணினார். அவங்க மூலமா ஜெயம் ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆரம்பிச்சுட்டோம்” என்கிறார் ‘சைரன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அந்தோணி பாக்யராஜ்.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஏன் ‘சைரன்’ என்கிற டைட்டில்?
‘சைரன்’ன்னு சொல்லும்போதே அந்த சத்தத்தை நாம உணர முடியும். இந்த டைட்டிலுக்கான பிளஸ்பாயின்ட் அதுதான். ‘சைரன்’ ஆம்புலன்ஸையும் போலீஸ் வாகனத்தையும் குறிக்கும். இந்த ரெண்டு சைரனுக்கும் இடையில நடக்கிற கதைதான் படம். அதாவது உயிரைக் காப்பாற்றக் கூடிய ஆம்புலன்ஸ் டிரைவர், ஏன் சிறைக்குப் போறான், ஏன் பரோல்ல வெளியே வர்றான் அப்படிங்கறதுதான் கதை. ஜெயம் ரவி சார் இதுவரை மெச்சூர்ட் கேரக்டர் பண்ணினதில்லைனு நினைக்கிறேன். அவரை ஜாலியா பார்த்திருப்போம். ஆக்‌ஷன் ஹீரோவா பார்த்திருப்போம். ஒரு நடுத்தர வயதுக்காரரா, சால்ட் அண்ட் பெப்பெர் லுக்ல பார்த்ததில்லை. இதுல அந்த வித்தியாசத்தைப் பார்க்க முடியும். நடிக்கிறதுக்கு அதிக வாய்ப்புள்ள படம் இது. அதை சிறப்பா பண்ணியிருக்கார்.

ஜெயம் ரவியின் இந்த லுக்குக்காக நீங்க ஒரு வருஷம் காத்திருந்ததா சொன்னாங்களே…
இந்தக் கதையில, ரவி சாருக்கு இரண்டு தோற்றம் இருக்கு. அவர் ஸ்மார்ட்டான ஹீரோ. ரொம்ப இளமையா இருப்பார். ஒரு தோற்றத்துக்கு அவரை 45-வயசுக்காரரா காண்பிக்க வேண்டியிருந்தது. முதல்ல இளமையான தோற்றத்துல இருக்கிற காட்சிகளை ஷூட் பண்ணிட்டோம். படம் ஆரம்பிக்கும்போது, அவர் ‘பொன்னியின் செல்வன்’ உட்பட சில படங்கள்ல நடிச்சுட்டு இருந்தார். அதை முடிச்சுட்டு வர்றதுக்காகக் காத்திருந்தோம். அதுக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆயிடுச்சு. அவர் வந்த பிறகு சால்ட் அண்ட் பெப்பர் லுக் கேரக்டருக்கான படப்பிடிப்பை ஆரம்பிச்சோம்.

இரண்டு தோற்றம்னா, பிளாஷ்பேக்ல கதை நடக்குதா?
அப்படி இருக்காது. இந்த திரைக்கதை ‘நான் லீனியர்’ முறைப்படி முன்னும் பின்னுமா போகும். அதனால, ஒரு குறிப்பிட்ட ஒரு இடத்துல பிளாஷ்பேக் ஆரம்பிக்கும்னு சொல்ல முடியாது. இயல்பான கதையோட்டமாகவே இருக்கும். கதை சொல்லும் விதத்துல வித்தியாசம் இருக்கும்.

கீர்த்தி சுரேஷ் போலீஸ் வேடத்துல வர்றாங்க… அனுபமா பரமேஸ்வரன்?
ரெண்டு ஹீரோயின். ரவி சார் ஜோடியா அனுபமா நடிக்கிறாங்க. கீர்த்தி சுரேஷ் போலீஸா வர்றாங்க. கீர்த்தி சுரேஷும் ஹீரோவும் எதிரெதிர் துருவம். வில்லன்களை மீறி இவங்களுக்குள்ள நடக்கிற மோதல் சீரியஸாக இருக்கும். கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிச்சதுல இருந்து இதுல வேறுபட்ட நடிப்பை பார்க்கலாம்.

ஜெயம் ரவி சிறையில இருந்து வர்றார். பிறகு போலீஸ் ஸ்டேஷன். இதை தாண்டி கதையில என்ன சொல்றீங்க?
ஃபேமிலி விஷயங்கள் இருக்கும். சென்டிமென்ட், குடும்பத்துக்குள்ள நடக்கிற சம்பவங்கள் எல்லாமே ரசனையா இருக்கும். அதுக்குள்ள ஒரு மெசேஜ் இருக்கு. அந்த மெசேஜ் குடும்பங்களுக்கான விஷயமா இருக்கும். யோகிபாபுவுக்கு படம் முழுவதும் டிராவல் பண்ற கேரக்டர். காமெடி டிராக் அப்படின்னு இல்லாம கதையோட வர்ற மாதிரி இருக்கும். அழகம் பெருமாள், சமுத்திரக்கனி உட்பட நிறைய பேர் நடிச்சிருக்காங்க. கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்.

Related posts