திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 7 நாட்களாக ராபர்ட் பயஸ் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்தும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ராபர்ட் பயஸ் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதனை உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.
சிறப்பு முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்து விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கடவுச்சீட்டு எடுப்பது தொடர்பாக தன்னை இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், சிறப்பு முகாமில் தங்களுக்கு மட்டும் தொடரும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான தனிமைச் சிறைவாசம் முடிவுக்கு வர வேண்டும் என்பனவே ராபர்ட் பயஸ் முன்வைத்த கோரிக்கையாக காணப்படுகின்றது.
இந்நிலையில் 7 நாட்களாக தொடர்ந்த அவரது உண்ணாவிரத போராட்டத்தை உரிய அலுவலர்கள் யாரும் கண்டுக்கொள்ளாமல் காலம் கடத்தி வந்த நிலையில் இதனை கண்டித்து ஏனைய முகாம்வாசிகள் தெரிவித்த எதிர்ப்பினையடுத்து வட்டார சிறப்பு துணை ஆட்சியர் மற்றும் துணை காவல் ஆணையர் ஆகியோர் நேரடியாக சிறப்பு முகாமுக்கு வருகைத் தந்து கோரிக்கைகளை கேட்டறிந்து நடைபயிற்சி உள்ளிட்ட முகாம் சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக ஏற்பதாகவும் ஒரு வாரத்தில் இலங்கை துணைத் தூதகரத்திற்கு அழைத்து செல்வதாகவும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியினைத் தொடர்ந்து இராபர்ட் பயஸ் தற்காலிகமாக தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஒருவாரத்தில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து செல்வதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியினை நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் தனது உண்ணாநிலை போராட்டத்தை தொடரப் போவதாகவும் இராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.