ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவது உறுதி என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நன்கு அறிவார். ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரித்துச் செய்வதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்பு ஊடாகவே தடைகளை ஏற்படுத்துவார்.
ஜனாதிபதியின் அரசியல் தந்திரத்தை நன்கு அறிவோம் எனச் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளும்,ஆளுங்கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் அமைச்சு பதவிகள் இல்லாத பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.
ராஜபக்ஷர்கள் எவரையும் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க நிலை தோற்றம் பெற்றுள்ளதால் ஜனாதிபதி தேர்தல் குறித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வி அடைவது உறுதி என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.ஆகவே எந்த வழியிலாவது தேர்தலை பிற்போடுவதற்கு அவர் விசேட கவனம் செலுத்துவார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரித்துச் செய்வதற்கு தற்போது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரித்துச் செய்வதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் அரசியல் தந்திரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றார்.