ஆயுள் சிறைக் கைதியான திலகன் (ஜெயம் ரவி), 14 வருடங்களுக்குப் பிறகு தன் அப்பாவைப் பார்க்க பரோலில் வருகிறார். இந்நிலையில் அந்தப் பகுதியின் அரசியல் பிரமுகர்களான மாணிக்கமும் (அழகம் பெருமாள்), அவர் கட்சியைச் சேர்ந்த அஜய்யும் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளைத் திலகன்தான் செய்திருப்பார் என்று நம்புகிறார் காவல்துறை ஆய்வாளர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்). திலகன் கொலைகாரனா?கொல்லப் பட்டவர்களுக்கும் அவருக்கும்உள்ள தொடர்பு என்ன? திலகன் சிறை சென்றது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது மீதிக் கதை.
மர்மமான கொலைகளையும் தந்தை மகள் பாசத்தையும் கலந்து எமோஷனல் த்ரில்லர் வகைப் படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுகஇயக்குநர் அந்தோணி பாக்யராஜ். கொலையாளி யார் என்பதைவிடக் கொலைகள் எப்படி நடந்தன என்பதிலும் கொலையாளியைச் சிக்க வைப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் உள்ள சவால்களையும் முன்வைத்து நகரும் துப்பறியும் காட்சிகள் திரைக்கதைமீதான ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன. எந்த இடத்திலும் போரடிக்காமல் செல்லும் அந்த திரைக்கதைதான் பலம் என்றாலும் விசாரணை தொடர்பான காட்சிகள்,முக்கியத் திருப்பங்கள், சில இடங்களில்காவல்துறை நடைமுறைகளுக்குப் பொருந்தாதவையாகவும் வலுவான காரணமில்லாததாகவும் இருப்பது உறுத்தல்.
கொலைப்பழியைச் சுமக்கும் தந்தையை வெறுத்து ஒதுக்கும் மகள், பாசத்தைப் பொழியும் அம்மா, அன்புகாட்டும் உடன்பிறப்புகள் என எமோஷனல் காட்சிகளுக்கான கட்டமைப்பு இருந்தாலும் காட்சிகளில் மெலோ டிராமாத்தன்மையும் பழமையின் வாடையும் வீசுவது ஏமாற்றம்.
திலகனின் முன்கதையில் சாதி ஆணவக் கொலையைத் தொடர்புப்படுத்திச் சாதித் திமிருக்கு எதிரான சில அழுத்தமான வசனங்களை வைத்திருப்பதை பாராட்டலாம். பொய்பழியால் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிரபராதிகளின் வலியைப் பதிவு செய்யும் முயற்சி சிறப்பு. ஆனால் அதை இன்னும்அழுத்தமான காட்சிகளுடன் முன்வைத்திருந்தால் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஜெயம் ரவி, வழக்கம்போல் அர்ப்பணிப்புடன் அருமையாக நடித்திருக்கிறார். நடுத்தர வயது மனிதனின் தோற்றத்தையும் உடல்மொழியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொலைப் பழி சுமந்தபடி மேலதிகாரிகளின் ஏளனத்தைச் சகித்துக் கொண்டு கொலை காரனைக்கண்டுபிடிப்பதற்கான முனைப்புடன் பணியாற்றும் காவல்துறை அதிகாரியாகக் கீர்த்தி சுரேஷ், கவனம் ஈர்க்கிறார்.
யோகிபாபு, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். முன்கதையில் ஜெயம் ரவியின் மனைவியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் குறை சொல்ல முடியாத நடிப்பைத்தந்திருக்கிறார். திமிர் பிடித்த காவல்துறை உயரதிகாரியாக சமுத்திரக்கனி, ஜெயம்ரவியின் அம்மாவாக துளசி, மகளாகயுவினா பார்த்தவி, தங்கையாக சாந்தினிதமிழரசன் என துணைக் கதாபாத்திரங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில்பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சாம்.சி.எஸ்பின்னணி இசை சில இடங்களில் இரைச்சல். செல்வகுமார் எஸ்கேவின் ஒளிப்பதிவுபடத்துக்குப் பலம். நிகழ்காலத்தையும் நாயகனின் முன்கதையையும் மாற்றி மாற்றிச் சொல்லும் திரைக்கதையைச் சிக்கலின்றி நகர்த்திச் சென்றதில் படத்தொகுப்பாளர் ரூபனின் உழைப்பு பளிச்சிடுகிறது.
துப்பறியும் த்ரில்லராக ஓரளவு திருப்தியளிக்கும் சைரன், கதையின் உணர்ச்சிகர அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நிறைவளித்திருக்கும்.