மின்கட்டண குறைப்புக்காக மின்சார சபை முன்வைத்துள்ள தரவுகளை தொழில்நுட்ப ரீதியில் பரிசீலனை செய்ய வேண்டும். மின்சார சபையின் அதிகாரிகள் தவறான தரவுகளை சமர்ப்பித்துள்ளமை கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது ஆகவே இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நாட்டு மக்களின் பக்கம் இருந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்சார சபை முன்வைத்துள்ள மின்னுற்பத்திக்கான செலவு உள்ளிட்ட பல தரவுகள் பொய்யானவை..மின்நிலையங்களின் நிலையான கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.மின்சார சபையின் ஒருசில அதிகாரிகள் கணிதத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இந்த திறமையை கொண்டு அவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட முயற்சிக்கிறார்கள்.
மின்கட்டணம் குறைப்புக்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள தரப்படுத்தல்களின் உண்மை தன்மையை ஆராய்வது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடமையாகும்.நாட்டு மக்களுக்காக ஆணைக்குழு கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும்.
மின்கட்டமைப்பின் நெருக்கடியால் தேசிய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன.அத்துடன் கைத்தொழிற்றுறையில் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் மின்கட்டணத்துக்கு அமைவாக இலங்;கையில் மின்கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கைத்தொழிற்றுறையில் அதிக போட்டித்தன்மை நிலவும் வியட்நாம்,பங்களாதேஷ் மற்றும் தென்னிந்தியாவுக்கு இணையாக இலங்கையில் 40 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய இலங்கையில் கைத்தொழிற்றுறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன.குறைந்தளவான மின்கட்டணம் உள்ள போட்டித்தன்மையான நாடுகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செல்கிறார்கள்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம்,அரச வருமானத்தை அதிகரித்து விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.2020 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் ஒவ்வொரு தனிநபரிடமிருந்து நேரடி மற்றும் மறைமுக வரிகள் ஊடாக 01 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளது.பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளதால் மேலும் 01 இலட்சம் ரூபாவை அறவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களின் பக்கம் இருந்து மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.அதிகளவான மின்கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்த முடியாமல் போகும்.யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நிலை நீடித்தால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும்.
இவ்வாறான பின்னணியில் மின்சார சபை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.மின்சார சபையின் செலவுகளை கட்டுப்படுத்தல் அத்தியாவசியமானது.மக்களுக்காக ஆணைக்குழு செயற்படாமல் இருந்தால் ஆணைக்குழுவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைவார்கள் என்றார்.