சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்த் திரைத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்பதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ‘கலைஞர் 100’ விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்முறையாக இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நவீன திரைப்பட நகரத்தில் விஎஃப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்ஷன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட இருக்கிறது.