சிந்தனைச் செல்வன் பல்துறை கலைஞர் திரு. வைரமுத்து செல்வராஜா மாஸ்டரை அறியாதவர் யார்.. கனடா எம்.ரி.ஆர் எப்.எம் வானொலியில் இன்றும் அவர் குரல் இளமையுடன் அலாவுதீனில் நடித்த பாத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறது.
இன்று சமூக வலைத்தளங்களில் அவருடைய சாதனைகள் பற்றி வெளியான பட்டியலை அப்படியே கூறிவிட்டு போனால் கடமைக்கு எழுதியதாகப் போய்விடும். அதிலிருந்து வேறுபட்டு, என் வாழ்வில் இந்தக் கலைஞர் யார் என்று பார்க்க முயல்கிறேன். நினைவுக்குதிரையை பின் நோக்கி தட்டி விடுகிறேன்..
அன்று நான் சுமார் 18 வயதில் நிற்கிறேன்.. ஒரு நாடக நடிகனாக கனவுகள் கண்களில் மின்னுகிறது. சினிமாவில் பிரபலமாக வேண்டுமென்ற இலக்கை சொன்னால் மற்றவர் கேலிக்குள்ளாக நேரிடும் என்பதால் நாடக நடிகனாக என் சினிமா கனவுகளை தீர்த்தபடி, எனது இரண்டு நாடகங்களை கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றிவிட்டு, யாழ். நகரில் நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது என்னைப் போலவே கலைத்தாகம் கொண்ட ஈழத்து கலைஞர்களின் காத்திருப்பேன் உனக்காக என்ற திரைப்படத்தின் கட்டவுட் என்னை கவர்ந்தது, அன்று 1976 ல் ஒரு நாள் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது, அந்தத் திரைப்படத்தில் செல்வராஜா மாஸ்டர் நாயகனாக மின்னிக்கொண்டிருந்தார். பின்னரும் தளர்வின்றி அடுத்த படம் வந்தது நெஞ்சுக்குத் தெரியும் 1979 மீண்டும் அவரை நினைவிற்குக் கொண்டு வந்தது.
நம்மால் முடியாது, ஒரு போதும் முடியாது சினிமா என்றால் இந்தியாதான் என்று இன்றும் மனம் தளர்ந்து நிற்கும் நம்மவரிடையே நம்பிக்கையையும், நம்மாலும் முடியும் என்ற செய்தியை அந்தத் திரைப்படங்கள் பேசிக் கொண்டிருந்தன. அந்தவகையில் ஈழத்து திரைப்படக் கலைஞர்களை என்றும் முதலிடத்தில் வைத்துப் போற்றும் என்னைப் போன்றவர்களின் மனங்களில் மாஸ்டர் நீங்காத இடம் பிடித்த கலைஞராக மிளிர்ந்தார்.
அக்காலத்தே இரண்டு நாடகங்கள் நுழைவுச்சீட்டு எடுத்து பார்க்கக்கூடிய நாடகங்களாக பட்டி தொட்டி எங்கும் புகழடைந்திருந்தன. அன்றொருநாள் வல்வையில் இருந்து வள்ளத்தில் ஏறி கடல் வழியாக வற்றாப்பளை அம்மன் பொங்கலுக்கு போயிருந்தேன், அங்கு சிறப்புக் கூடாரம் அடித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு காட்சியாக திரைப்படம் போல நடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது வடக்கும் தெற்கும் என்ற நாடகம். பார்த்தேன் சினிமா போல விரைவு நாடகமாக இருந்தது. அது போல அலாவுதீன் என்ற நாடகம் அதற்கு போட்டியாக பட்டை கிளப்பியது அதில் நாயகனாக நடித்தவரே நமது செல்வராஜா மாஸ்டர். அன்றும் அவர் கலை வாழ்வு நமது பார்வையை அவர் பக்கமாக இழுத்தது.
அக்காலத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எல்லாம் நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர்களே, செல்வராஜா மாஸ்டரையும் அதே நாடகமே திரைக்கு அழைத்து வந்தது. அவரை சந்திக்க நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருந்தேன், காத்திருப்பேன் உனக்காக என்பது போல.. ஆனால் திடீரென நமது வாழ்வில் நுழைந்த போர் கலைகளையும் கனவுகளையும் நார் நாராக கிழித்து வீசியது. ஆனால் நமது கனவுகளையும் கலைகளையும் போர் கிழிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று புலம் பெயர்ந்து, கலைகளை காக்க பாடுபட்ட கலைஞர்களில் போற்றப்பட வேண்டிய ஒருவர் கேவி.செல்வராஜா மாஸ்டர் அவர்கள். போர் முடிந்தாலும் இன்று வரை அவர் கலைப்போர் தொடர்கிறது.
நாடகம், சினிமா, ஊடகம் என்று எத்தனை வடிவங்கள் வந்தாலும் அவற்றுக்கெல்லாம் வரைவிலக்கணம் ஒன்றே ஒன்றுதான். நாம் சொல்லும் ஒரு செய்தியை படித்தவனில் இருந்து பாமரன் வரை எல்லோருக்கும் புரியும்படி சொல்வதற்கே அனைத்துக் கலை வடிவங்களும் போராடுகின்றன. புரிய வைத்தால் வெற்றி புரியாவிட்டால் தோல்வி இதுதான் கலை. கலைஞனும் தன் வாழ்வில் தனது படைப்பை ரசிகர்களுக்கு புரிய வைக்கவே போராடுகிறான்.
ஒரு கலைப்படைப்பை நூறு பேர் பார்க்கிறார்கள் என்றால் நூறு பேருக்கும் அதை சரியாக விளங்கப்படுத்தினாலே ஒருவருக்கு கலை உலகில் வெற்றி கிடைக்கும். செல்வராஜா மாஸ்டர் அலாவுதீனிலேயே அந்த வெற்றியைப் பெற்றுவிட்டார். விளங்கப்படுத்த தெரிந்த ஒரு கலைஞனையே உலகம் விளங்கி ஏற்றுக் கொள்ளும். அப்படி மக்களால் விளங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கலைஞனே மாஸ்டர்.
அவரை டென்மார்க்கில் அருமை நண்பர் திரு. மு. இராஜலிங்கம் அவர்களின் புதல்வன், இசையமைப்பாளர் ரகீசின் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். அவருடைய பேரன்தான் ரகீஸ் அவர்கள். அன்று தொடங்கிய நேரடி நட்பு இன்று வரை தொடர்கிறது. எம்.ரீ.ஆர் எப்.எம்தமில் எனது செய்திகளை எடுத்து சென்று மகுடமிட்ட அவரையும், அதன் நிர்வாகி திருமதி மீரா அவர்களையும் இந்த நேரம்; நன்றியுடன் போற்றுகின்றேன்.
இன்று பொய்யும், போதையும், பயிற்சியற்ற கலைகளும், குறுங்காலத்தில் பணம் பார்க்கும் ஆசையுமாக அலையும் சமுதாயம் எழுபது வருடங்கள் கலைக்காக போராடுமா சாத்தியமே இல்லை. அத்தகைய ஒரு சமுதாயத்தில் கலை நிலவாக அவர் வலம் வருகிறார். மேடையைப் பறித்துவிட்டால் கலைஞர் இல்லை என்று நினைக்கும் நவீன முட்டாள்களிடையே நிலவிற்கு மேடையில்லை, முகில்களே திரையாகவுதம், சூரியனே மின் விளக்காகவும் இருக்கும் நிலவையே மனிதன் அண்ணாந்து பார்க்கிறான். இது தெரிந்தவனே கலைஞன், அவனுக்கு இந்தியாவும் தேவையில்லை, இலங்கையும் தேவையில்லை. இதை புரிந்தவராக கலை நிலவாக வலம் வரும் அவரை இந்த நேரம் வாழ்த்தி மகிழ்கிறேன்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தேன்.. நடிகராக, ஆசிரியராக, அதிபராக, ஓய்வில்லாத ஒலிபரப்பாளராக, சாரதிகளின் பயிற்றுவிப்பாளராக, இயக்குநராக, எழுத்தாளராக என்று எல்லாத்துறைகளிலும் நீக்கமற முத்திரை பதித்துள்ளதை கண்டு ஆச்சர்யப்படுகிறேன்.
பிறந்தாலும் வாழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற நிலை கண்ட ஆரிரியருக்கு அரிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலை செல்வமாக பிறந்து, அலாவுதீனில் அதுவே ராசாவாக ஆகி, அவர் சிந்தனை செல்வமாகி இன்று வாழ் நாள் சாதனையாளராக மலை முகட்டைத் தொடுகிறது.
இந்த நேரம் தங்கள் தளராத தன்னம்பிக்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறுகிறேன்.. வாழ்க வாழ்க வாழ்..
கி.செ.துரை 21.02.2024