சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி நடித்துள்ள ரன்தீப் ஹூடா, சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு, “இந்த சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை” என்று அனுபவம் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரத மாதாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவரின் நினைவு தினம் இன்று. தலைவர், பயமறியா சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் தொலைநோக்கு சிந்தனையாளரான வீர் சாவர்க்கர் தான் அவர். உயர்ந்த அறிவாற்றல் மற்றும் தனது தைரியத்தால் அந்த மனிதர் பிரிட்டிஷாரை அச்சுமூட்டியதால், காலாபானி சிறையில் அவரது வாழ்நாளில் இரண்டு முறை 7-க்கு 11 அடி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் அவர் என்ன செய்திருப்பார் என்பதை அறிந்துகொள்ள அவர் அடைக்கப்பட்ட சிறையில் என்னை நானே அடைத்துக்கொள்ள முயற்சித்தேன். 11 ஆண்டுகள் அவர் அடைப்பட்டுக் கிடந்த தனிமைச் சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை.
சிறையில் கொடுமைகளையும், மனிதாபிமானமற்ற சூழலையும் எதிர்கொண்ட வீர் சாவர்க்கரின் இணையற்ற சகிப்புத் தன்மையை கற்பனை செய்து பார்க்கிறேன். அவரது விடாமுயற்சியும், பங்களிப்பும் ஈடு இணையற்றது. எனவே பல தசாப்தங்களாக இந்திய எதிர்ப்பு சக்திகள் அவரை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை ரன்தீப் உடன் உட்கார்ஷ் நைதானி என்பவரும் எழுதியுள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.