நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் பா.ஜ.க.பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
திமுக, காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சிகள். தேர்தலுக்கு பிறகு தேடினாலும் தி.மு.க. கிடைக்காது, முற்றிலும் அகற்றப்பட வேண்டிய கட்சி தி.மு.க. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டைக்கொள்ளையடிப்பதற்காகத்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுத்து வருகின்றனர்.
ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேள்வி கேட்கின்றனர். ராமர் கோவில் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட்டை தி.மு.க. பயன்படுத்தி உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியா கூட்டணிக்கட்சிகள் செயல்படுகின்றன.
தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் பா.ஜ.க.வுக்கு நன்றாக தெரியும். இந்தி, தமிழ், என பேசுகின்றனர். இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து மாநிலத்தில் இருந்து முருகனை எம்.பி. ஆக்கியுள்ளோம். தமிழகத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தவரை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்கிறோம்.
தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே தி.மு.க.வினர் குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறார்கள் எனக்கேட்டால் தி.மு.க.விடம் பதில் இருக்காது.
வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள், ஆனால் உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும் காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கின்றன சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தேசத்தின் ஒற்றுமை எண்ணம் அவர்களுக்கு இல்லை, மொழி, இனம் என மக்களை பிரித்தாள நினைக்கின்றனர். எனக்கு தமிழ்மொழி தெரியாது, ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன். வீடு வீடாக சென்று பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். நான் பேசுவதை புரிந்துகொண்டு எனக்காக மக்கள் என்னை வாழ்த்த வேண்டும். பா.ஜ.க. 400 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க ஆசீர்வதிக்க வேண்டும். நெல்லை மக்களின் ஆசியோடு பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.