நடிகை இலியானா டி குரூஸ், ரன்தீப் ஹூடா நடித்துள்ள ‘தேரா கியா ஹோகா லவ்லி’ (Tera Kya Hoga Lovely) படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை பல்விந்தர் சிங் ஜான்ஜுவா என்பவர் இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் பவன் மல்ஹோத்ரா, ராஜேந்திர குப்தா, கரண் குந்த்ரா, கீதிகா வித்யா ஓலியான் மற்றும் கீதா அகர்வால் ஷர்ம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 8-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கருப்பான சருமம் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் நிலையை பற்றி படம் பேசுகிறது. படத்தில் ‘லவ்லி’ என்ற கருமை நிறமுள்ள பெண்ணாக நடிக்கிறார் இலியானா. கருப்பாக இருப்பதால் இலியானாவின் திருமணத்தில் எழும் பிரச்சினைகளை காமெடியாக சொல்கிறது ட்ரெய்லர். வரதட்சிணை கொடுமைகள் பற்றியும் படம் பேசுகிறது. ஹரியாணாவில் நடக்கும் இக்கதையில் ரன்தீப் ஹூடா போலீஸ் அதிகாரியாக வருகிறார். படத்தின் ட்ரெய்லர் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
கருப்பு சருமம் மற்றும் வரதட்சிணை என சமூகத்தில் பெண்கள் தற்போது எதிர்கொள்ளும் தீவிர பிரச்சினைகளான இந்த இரண்டையும் பற்றி வெளிப்படையாக பேசுவதால் படத்துக்கு வலைதளவாசிகளில் ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வரும் அதேவேளையில், இந்தப் படத்தில் இலியானா நடித்தது தொடர்பாக வலைதளவாசிகளில் மற்றொரு பிரிவினர் விமர்சித்து வருகின்றனர்.
படம் நல்ல நோக்கத்தை பேசுவதாக இருந்தாலும், கருப்பு நிறமுள்ள பெண் பாத்திரத்தில் இலியானா நடிப்பதற்கு பதிலாக உண்மையாக கருமை நிறமுள்ள பெண்ணை நடிக்க வைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் கதாபாத்திர சித்தரிப்பு இன்னும் அதிக நம்பகத்தன்மையை அளித்திருக்கும். அப்படி செய்யாமல் இலியானாவை செயற்கையாக கருமையாக்கி சித்தரித்து இருப்பதால், படத்தின் உண்மையான நோக்கம் நீர்த்துப்போகிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.