யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (29) ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு நெரிசலற்ற அமைதியான சூழல் யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சவாலாக இருப்பது நீண்ட தூரம் தரித்து நிற்கும் பேருந்துகள். நாம் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
வைத்தியசாலையின் புதிய கட்டட தொகுதிக்கு முன்பாக தரித்து நிற்கும் பேருந்துகள், எமது மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதிலும், நோயாளிகளின் ஆரோக்கியம் தொடர்பிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
அதனால் யாழ். மாநகர சபை, மாவட்டச் செயலகம், ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாண ஆரோக்கிய நகரம் எனும் திட்டத்தினை உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.
இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை பணியாளர்களும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பணியாளர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வருகை தரவுள்ளனர்.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாழ்ப்பாண நகரத்தினை ஆரோக்கிய நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
எனவே, எதிர்காலத்திலும் நகரத்தினை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதற்கு வாகன நெரிசல் ஒரு இடையூறாக காணப்படுகிறது. இதற்கு காரணமாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி நகரத்தை தூய்மையாக பேணுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை கட்டட தொகுதி சூழலில் தரித்து நின்று சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை அவ்விடத்தில் தரித்து நிற்கக்கூடாது என கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கூட்டமொன்றில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.