இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (05) லங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது.
90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர்.
நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் நிலமை காணப்பட்டிருந்தது.
இதனை அடுத்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அனுசரனையில் ஒபர் சிலோன் எனப்படும் அரசு சார்பற்ற நிறுவன பங்களிப்போடு இவர்களுக்கான பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக 22 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகள் 71 பேருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இவ்வாறு பிரஜாவுரிமை பெற்றவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பை சேர்ந்தவர்களே பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், குடிவரவு குடியகழ்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் இ. எச். ஜி. பிரசங்க, ஒபர் நிறுவன தலைவி செல்வி. சி. சூரியகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.