எதிர்க்கட்சி உறுப்பினர் இராசமாணிக்கம் எம்.பியின் பாதுகாப்பை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்துக்குள்ளும் பாராளுமன்ற வளாகத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சபாநாயகர் உள்ளிட்ட அதன் பணியாட்தொகுதியின் கடமையாகும். எதிர்க்கட்சி உறுப்பினர் இராசமாணிக்கம் தெரிவித்திருந்ததன் பிரகாரம் அவர் பிரதமரை சந்திப்பதற்கு அவரது காரியாலயத்துக்கு சென்றபோது, ஆளும் கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன அவரை தாக்குவதற்கு முயற்சித்ததாக இந்த சபையில் குற்றம் சாட்டியிருந்தார். இது பாரிய குற்றச்சாட்டாகும்.
பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகள் இருக்கின்றன. என்றாலும் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் எவ்வாறான கருத்துக்கள் இருந்தாலும் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. அது ஆளும் தரப்பாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரியே.
அதனால் எதிர்கட்சித் தலைவர் என்றவகையில் எதிர்க்கட்சி உறுப்பினர் என்றவகையில் இராசமாணிக்கம் எம்.பியின் சிறப்புரிமை தொடர்பில் கருத்து தெரிவிக்க எனக்கும் உரிமை இருக்கிறது. அதனால் இராசமாணிக்கம் எம்.பியின் பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று இராசமாணிக்கம் எம்.பியின் பாதுகாப்பு தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.