தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் தங்களுக்கு 2 தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதியும் என மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தது. அதேபோல், தனிச்சின்னத்தில் போட்டியிடவும் அனுமதிக்கும்படி கோரியிருந்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முன்வந்தது. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தி.மு.க. – விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது. அதன்படி, தி. மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகளுக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதியும் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.