சிறு வயதில் இருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்கிற அவப்பெயருடன் இருக்கிறார் அபர்ணா (ஹன்சிகா மோத்வானி). வேலை தேடி சென்னைக்கு செல்கிறார். அங்கு அவர் நினைப்பது எல்லாம் நடக்கிறது. இதற்கு காரணம் ஓர் ஆவி என்பது ஹன்சிகாவுக்குத் தெரிய வருகிறது. நல்லது செய்யும் அந்த ஆவியின் உதவியிலிருந்து விடுபட அவர் முயற்சிக்கும்போது, அதன் முன் கதையை அறிந்து கொள்கிறார். பிறகு ஹன்சிகா என்ன செய்கிறார்? அந்த ஆவி ஏன் இப்படி மாறியது?, அது என்ன செய்ய விரும்புகிறது? என்பதுதான் மீதிக் கதை.
வழக்கமாகப் பழிவாங்கும் ஒரு பேய்க் கதைதான். முதல் பாதியில் ஓரளவுக்குச் சுவாரசியமாகவே கதையை நகர்த்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள் சபரி–குரு சரவணன். எதுவுமே நடக்காத ஒருவருக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்போது ஏற்படும் குழப்பங்கள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. வழக்கமான காட்சிகளுக்கு மாறாக ஒரு கல்லிலிருந்து ஆவி வருவதும், அது ஹன்சிகாவை நோக்கி வருவதற்கான காரணங்களும் நெருடல் இல்லாமலேயே சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாகப் பேய்ப் படங்களில் முதல் பாதி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு, இரண்டாம் பாதியில் பூர்த்தி செய்யும் அளவுக்கு திரைக்கதையை நகர்த்தி செல்ல வேண்டும். ஆனால், அங்குதான் இயக்குநர்கள் கோட்டை விடுகிறார்கள்.
ஒரு பெண் ஆவியானதற்கு ஃபிளாஷ்பேக், துடிதுடித்துக் கொல்லும் நால்வர், அவர்களைப் பழிவாங்கப் புறப்படும் உக்கிரமான ஆவி, அந்த ஆவிக்குத் தேவைப்படும் ஒரு மனிதன், ஆவியை அடக்க மாந்திரீகம் என வழக்கமான சட்டகத்துக்குள் கதை பயணிப்பது சோர்வடைய செய்துவிடுகிறது. மேலும் பயமுறுத்தும் அளவுக்கும் காட்சிகள் இல்லாதது பேய்ப் பட உணர்வையும் தர மறுக்கிறது.
கோரமாக ஒப்பனை செய்துகொண்டு நால்வரையும் தேமே என பேய்க் கொல்வதும் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆவியின் ஃபிளாஷ்பேக்கை கேட்டதும் தன் உடலில் ஆவி இறங்க ஹன்சிகா சம்மதிப்பது போன்ற காட்சிகள் ஏற்கெனவே வந்த படங்களை ஞாபகப்படுத்துகின்றன. ஆவியைக் கல்லில் அடைக்கும் மந்திரவாதி, அந்தக் கல்லை அப்படியே விட்டுச் செல்வாரா? பேய்ப் படங்களை காமெடியாக எடுக்கும் இந்தக் காலத்தில் காமெடிக்கென தனி டிராக் போல காட்சிகள் வைத்து வீணடித்திருக்கிறார்கள்.
படம் ஹன்சிகாவைச் சுற்றியே நகர்கிறது. முடிந்த வரை நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடி வேண்டும் என்பதற்காக பிரதீப் ராயனை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர் அவ்வப்போது வந்து செல்கிறார். ஃபிளாஷ்பேக்கில் குழந்தையின் தாயாக வருபவரும் குழந்தையும் கவனம் ஈர்க்கிறார்கள். வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன்–தங்கதுரை காமெடி கூட்டணியில் ஈர்ப்பில்லை.
படத்துக்கு இசை சாம் சி.எஸ். பாடல்கள் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. திகில் படத்துக்குரிய பின்னணி இசை மிஸ்ஸிங். சக்திவேலின் ஒளிப்பதிவிலும் தியாகராஜனின் படத் தொகுப்பிலும் குறையில்லை. இது காரமில்லாத ‘கார்டியன்’.