யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் பற்றி சர்வதேச தரப்புக்கள் உட்பட உள்நாட்டிலும் அதிகம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் துரதிஸ்டவசமாக நாட்டின் தொல்லியல் மற்றும் பொலீஸ் திணை்களங்கள் அவற்றுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டுவருகின்றமை கவலைக்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். சமத்துவக் கட்சியின் பொது செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சிவராத்தி தினத்தில் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் பொலீஸார் மேற்கொண்டு அடாவடித்தனமான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
சிவராத்திரி நிகழ்வு சைவ மக்களின் மிக முக்கிய நிகழ்வாகும், இந்த நாளில் மிகவும் பக்தி பூர்வமாக சிவ வழிபாட்டினை மேற்கொள்வதற்காக தங்களது பூர்வீக ஆலயத்திற்கு சென்ற தமிழ் மக்கள் மீதும் அங்கு பூசை வழிபாடுகளி்ல் ஈடுப்பட்டவர்கள் மீதும் பொலீஸார் காட்டுமிராண்டித்தனமாக
நடந்துகொண்டுள்ளனர். பொலீஸாரின் செயற்பாடுகள் பௌத்த சிங்கள மேலாதிக மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தது. புனித தலம் ஒன்றில் சப்பாத்து கால்களுடன் வெறுக்கத்தக்க வகையில் பொலீஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டன.
நாட்டு மக்களிடையே இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சட்டத்தின் வழி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடப்பாடுடைய பொலீஸ் திணைக்களம் தமிழ் மக்கள் விடயத்தில் அதற்கு மாறாக செயற்படுகிறது. இலங்கையை பொறுத்தவரை பொலீஸ் மற்றும் தொல்லியல் திணைக்களங்கள் இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றன.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் நடந்து சம்பவங்கள் போன்று இனியொரு சம்பவம் இடம்பெறாத நிலை உருவாக்கப்படல் வேண்டும்.அரச நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சந்திரகுமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.