மலையாள திரையுலகில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. முன்னதாக ‘2018’ திரைப்படம் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்தது.
தற்போது 21 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.176 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா வசூலை விட, தமிழகத்தின் வசூல் கூடியுள்ளது. உதாரணமாக கடந்த சனிக்கிழமை (மார்ச் 9) தமிழகத்தில் படம் ரூ.5.33 கோடி வசூலித்துள்ளது.கேரளாவில் ரூ.3.6 கோடி.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) தமிழகத்தில் ரூ.5.53 கோடி. கேரளாவில் ரூ.3.8 கோடி. தொடர்ந்து தமிழகத்தின் வரவேற்பு படத்தின் வசூலை அதிகரிக்க உதவியுள்ளது. அந்த வகையில் மலையாள திரையுலகில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்று ரூ.176 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’.
இரண்டாவது இடத்தில் ‘2018’ (ரூ.175 கோடி) திரைப்படம் உள்ளது. ரூ.135 கோடியுடன் மோகன்லாலின் ‘புலிமுருகன்’, மற்றும் ரூ.125 கோடியுடன் ‘லூசிஃபர்’ படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் ‘பிரேமலு’ தமிழ் வெர்ஷனில் வெளியாகும்பட்சத்தில் பாக்ஸ் ஆஃபீஸில் முன்னேறும் என தெரிகிறது.