மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறி மலை ஆலய பூசகர் உள்ளிட்ட கைதிகளை இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்கு சென்று 8 பேரையும் பார்வையிட்டு இருந்தேன். அதில் 5 பேர் 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பொய்யான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர்களது உடல் நிலை மோசமடைகின்றது. அதில் சிலருக்கு ஆஸ்மா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. அவர்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. மனிதவுரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை அவர்களை பார்வையிடவில்லை. கைது இடம்பெற்ற அன்றே மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்த போதும் இதுவரை பார்வையிடவில்லை. மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து முற்றுமுழுதாக பொய். கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் உணவு எதனையும் உண்ணவில்லை. அதற்கு பிற்பாடும் அவர்கள் உணவு உண்ணவில்லை. மூன்றாவது நாளாக அவர்கள் உணவு உண்ணவில்லை. அவர்களது குடும்பத்தினர் நேரடியாக சென்று பார்வையிட்ட போதும் அவர்கள் உணவு உண்ணவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.
அவர்களும் உண்ணாவிரதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியது தவறானது. இவர்கள் மீது நெருக்குவாரத்தை உருவாக்கி பொய்யாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்க இவ்வாறு செயற்படுகின்றார்களா அல்லது அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த வைக்க முயல்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, இதனை விளங்கிக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்களும் இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும். கொழும்பில் உள்ள இராஜதந்திர செயலங்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும்.
வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள போராட்டத்திலும் சகலரும் அணிதிரண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொளகின்றேன் எனத் தெரிவித்தார்.