வங்கிக் கணக்கு முடக்கத்தால் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலை எடுத்துரைத்து பேசிய ராகுல் காந்தி, கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எந்த ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மிகவும் அபூர்வ நிகழ்வாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்னாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒன்றாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் இல்லை. இந்திய ஜனநாயகத்தின் முடக்கம்.
மிகப் பெரிய எதிர்க்கட்சியாக எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. எங்களால் எந்த விளம்பரமும் கொடுக்க முடியவில்லை. எங்கள் தலைவர்களை எங்கேயும் அனுப்ப முடியவில்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இது.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நோட்டீஸ் 1990கள், மற்றொன்று ஆறேழு வருடங்களுக்கு முன்பான கணக்குகளில் இருந்தும் வந்தது. செலுத்த வேண்டியதாக கூறப்படும் மொத்தத் தொகையே ரூ.14 லட்சம்தான். ஆனால் தண்டனையோ எங்களின் மொத்த நிதியும் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.
ஏற்கெனவே தேர்தலில் போட்டியிடும் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு மாதத்தை இழந்துவிட்டோம். இது காங்கிரஸின் மீதான நிகழ்த்தப்பட்ட கிரிமினல் தாக்குதல். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த கிரிமினல் தாக்குதலை எங்கள் மீது நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் இன்று ஜனநாயகம் இல்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியலே பொய்யாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கருத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எங்களுக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளன, ஆனால், எங்களால் எந்தத் தேர்தல் செலவுக்கும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்கத் திட்டமிட்டுள்ளனர். எங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, இந்திய ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, “தற்போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் மிகவும் தீவிரமானது. அது இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் பாதிப்பதில்லை, நாட்டின் ஜனநாயகத்தையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.
வருமான வரித் துறை நோட்டீஸ்: 2018-19-ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால், ரூ.210 கோடி அபராதமும் விதித்த வருமான வரித் துறை, இதற்காக, காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளை முடக்கியது.
வருமான வரித் துறையின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வருமான வரித் துறை ஆணையத்தில் மேல்முறையீடு செய்து வருமான வரித் துறையின் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியது. அப்போது, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் கட்சியால் கட்டணங்கள், சம்பளம் வழங்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தது. என்றாலும் காங்கிரஸின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மார்ச் 8-ம் தேதி ஆணையத்தின் உத்தரவினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது. தீர்வாணையத்தின் உத்தரவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.