இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற பல்வேறு தினங்களில் உலக நீர் தினமும் ஒன்றாக அமைகிறது. ஆண்டுதோறும் மாரச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற இந்த நீர் தினமானது ஏனைய உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற தினங்களில் இருந்து அதிமுக்கியத்துவம் பெற்று சற்று வேறுபடுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை யாவரும் அறிந்ததே.
அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப் பாதுகாப்பை நன்கு வலுப்படுத்தி நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும்.
அதுமட்டுமன்றி, நாடுகளின் புவியியல் அமைப்புக்கு தக்கவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் இந்த நீர் தினத்தின் ஒரு அம்சம் ஆகும்.
மேலும், ஒரு நாட்டின் எதிர்காலப் பிரஜைகளாக சமூகத்தின் பல சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கும் மாணவ சமூகத்திற்கும் அவரவரது நாட்டின் நீர் வளப் பாதுகாப்புப் பற்றி விழிப்புணர்வு அளிப்பதும் இந்த உலக நீர் தினத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.
இன்னும் சொல்லப்போனால், நீரின்றி அமையாதது உலகு, நீர் வளங்கள் மிக விரைவாக அருகிச் செல்கின்றன. அத்தோடு, சூழல் பிரச்சினைகளில் முன்னோடியாகத் திகழ்வது இந்த நீர் பற்றாக்குறை எனும் தாற்பரியங்களைத் தாங்கி நிற்கிறது இந்த நீர் தினம்.
நீரில்லாத வாழ்க்கையை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாத அளவுக்கு நீர் எமது வாழ்வின் ஒரு பிரதான அங்கமாகத் திகழ்கின்றது.
1992ஆம் ஆண்டு பிரேஸிலில் ரியோடி ஜனய்ரா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை சூழலும் அபிவிருத்தியும் எனும் மாநாட்டின் 21ஆம் நூற்றாண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த நீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1993ஆம் ஆண்டு மாரச் மாதம் 22ஆம் திகதி முதன் முதலான உலக நீர் தினம் கொண்டாடப்பட்டது.
அதன் பின்னர் இன்று வரைக்கும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலகெங்கிலும் நீர் தினம் ஒவ்வொரு கருப்பொருளை வலியுறுத்திக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1993இல் முதன்முதலாக நீர் தினம் உலகளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீர் வளங்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மனித சமூகத்துக்கு வழங்குதல் என்பதே இதன் பிரதான நோக்கமாக இருந்தபோதிலும் அந்த ஆண்டில் விசேடமான கருப்பொருள் அல்லது எண்ணக்கருவோ அமைந்திருக்கவில்லை. எனினும் 1994ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் முதன்முறையாக “நீர் வளங்களைப் பராமரிப்பது எம் எல்லோரதும் கடப்பாடு” எனும் கருப்பொருளில் உலக நீர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.
எமது அன்றாட நடவடிக்கைகளின்போது எண்ணெய், பூச்சிகொல்லிகள், உரங்கள் மற்றும் வண்டல் மண் ஆகியவை நீரூடகங்களை எப்படியோ சென்றடைந்துவிடுகின்றன. எமது நீர் வளங்களைச் சுத்தமாக வைத்திருப்பதையும் மற்றும் நாம் சுற்றுபுறத்தில் போதியளவு நீர் இருப்பதை உறுதி செய்வதையும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அதாவது எமது வீட்டைச் சுற்றியுள்ள நீர் வளங்களை மாசுக்களிலிருந்து பாதுகாத்தல் எனப் பொருள்படும்.
1996ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “மகளிரும் நீரும்” என்பதாக அமைந்தது. நீர் சேகரிக்கும் கடமையில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் பெண்களாக அமைவதால் நீரால் பரவும் நோய்களுக்கு முதலில் ஆளாகுபவர்கள் பெண்களே.
இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றது. அதுமட்டுமில்லாமல், அதிக குழந்தைகள் இறந்த நிலையிலே பிரசவிக்கின்றன அல்லது குறைபாடுகளுடன் பிறக்கின்றன. பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார சேவையின்றி பெண்கள் மற்றும் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கும் தாக்குதலுக்கும் மற்றும் உடல்நலக் குறைவுக்கும் ஆளாகின்றனர். இது அவர்களின் கல்வி, தொழில் மற்றும் கண்ணியத்தை முற்றாகப் பாதிக்கிறது. வீடு, பாடசாலை, வேலைத்தளம் மற்றும் பொது இடங்களில் மேம்படுத்தப்படும் நீர் மற்றும் சுகாதார சேவைகள் பாலின சமத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. சேவைகள் அனைத்தும் அவர்களின் குறிப்பிட்ட தேவைக்கு அமையும் முகமாக பெண்களும் சிறுமிகளும் தீர்வுகளை வடிவமைத்துச் செயற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
நீர் மற்றும் துப்புரவு சேவைகள் இன்றிய சுற்றுப்புறங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலைப்பாடுகள் வாந்திபேதி போன்ற நோய்க் கிளர்ச்சியின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இது ஏழைச் சமூகங்களை பேரழிவுக்கு உட்படுத்தி நகரத்துக்கும் அதற்கு அப்பாலும் பரவுகின்றது. இதனால் சேவை காணாத நகர்ப்புறச் சூழல்கள் இலகுவில் அதிர்ச்சிக்கு ஆளாகின்றன. இந்நிலையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு உலக நீர் தினம் “தாகம் கொண்ட நகரங்களுக்கான நீர்” எனும் கருப்பொருள்கொண்டு அமையப்பெற்றது.
1997ஆம் ஆண்டு உலக நீர் தினம் “உலக நீர் போதுமானதா?” எனும் தொனிப்பொருளில் அமையப் பெற்றது. எமது பூமிக்கிரகம் ஓருபோதும் முற்றாக நீர் இன்றிப் போகாது. எனினும் சுத்தமான நன்னீர் எப்போதும் மனிதர்களுக்குத் தேவைப்படும் இடத்தில் எப்போதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
உலகில் ஆறு நாடுகளில் மட்டுமே உலகின் பாதி நன்னீர் அளவு காணப்படுகிறது.
“நிலத்தடி நீர் கண்ணுக்குப் புலப்படாத வளம்” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. 1998ஆம் ஆண்டு உலக நீர் தினம், நிலத்தடி நீர் பார்வைக்குப் புலப்படாமல் இருந்தாலும் இது ஒரு ஆரோக்கியமான கிரகத்தின் பல்லின விருத்தி, வளரும் உணவு மற்றும் பிற தேவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மறைந்துள்ள வளங்களான நீரோடைகள், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் ஏரிகள் என்பன மழைவீழ்ச்சி, உருகும் பனிமலைகள், நீரோட்டங்கள் மற்றும் நிலத்தடி நீர் என்பவற்றால் மீள்வளம் பெறுகின்றன.
1999ஆம் ஆண்டு “அனைவரும் நீரோட்டத்தின் கீழே வாழ்கின்றார்கள்” எனும் கருப்பொருளை விளக்கும் முகமாக உலக நீர் தினம் இடம்பெற்றது. நீரைப் பற்றி கற்பவர்கள் “நாங்கள் அனைவரும் நீரோட்டத்தின் கீழே வாழ்கிறோம்” என்று கூறுகிறார்கள். இதன் பொருள், நாம் இங்கே நீருக்கு ஆற்றும் எந்த செயலும் இந்த நீரோட்டத்தின் கீழே வாழ்கின்ற மக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கக்கூடும். அவ்வாறே, எங்களுக்கு மேலேயுள்ள நீரோட்டத்தை ஒருவர் மாசுபடுத்தினால் அந்த மாசு கீழேயுள்ள நீரோட்டத்தை அடைந்து எங்களைப் பாதிக்கும்.
இருபதாம் நூற்றாண்டைக் கடந்துவிட்ட நாம் இன்றும் அழுத்தமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாகிய “நீரினை அணுகும் வழி” என்பதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். உலக சனத்தொகை பெருகும்போது அதற்கேற்ப நீரின் தேவையும் வெகுவாக அதிகரிக்கும். அதேநேரத்தில் காலநிலை மாற்றம், வலுப் பற்றாக்குறை, நிலப் பயன்பாட்டுத் தீர்மானங்கள், கனிய வளங்களின் தொழிற்பாடுகள், தொழிற்சாலைகளின் தேவைப்பாடுகள் ஆகியவற்றால் நீரின் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் நீரின் தரம் என்பன மிகவும் சவாலாக உள்ளன.
எமது தற்போதைய நீர்ப் பயன்பாட்டைச் சமாளிப்பதற்கும் அதை எதிர்காலத்துக்காக கட்டமைப்பதற்கும் சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும். இதனால் பெருகி வரும் சனத்தொகைக்கு சேவை செய்ய முடியும்.
மேலும் எதிர்கால சந்ததியினருக்காக இருப்புக்களைப் பாதுகாக்க முடியும். இதனால் 2000ஆம் ஆண்டு உலக நீர் தினம் “21ஆம் நூற்றாண்டுக்கான நீர்” எனும் கருப்பொருளில் இடம்பெற்றது.
“ஆரோக்கியத்துக்கு நீர்” எனும் கருப்பொருளுடன் 2001ஆம் ஆண்டு உலக நீர் தினம் அமையப்பெற்றது. நீர் எமது ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. உயிரணுக்களுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டு செல்வது, கழிவுகளை வெளியேற்றுவது, மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைப் பாதுகாப்பது, உடல் வெப்பநிலையைப் பேணுவது உள்ளிட்ட எமது உடலின் பல செயற்பாடுகளில் நீர் முக்கிய பங்குவகிக்கிறது. நீர் எப்போதும் எங்களுக்கான அருந்து பானமாக இருக்க வேண்டும்.
“அபிவிருத்திக்கான நீர்” என்றவாறு அமைகிறது 2002ஆம் ஆண்டின் உலக நீர் தினத்தின் கருப்பொருள். நீரானது நிலையான அபிவிருத்தியின் முக்கிய இடத்தில் உள்ளது. அத்துடன் சமூக பொருளாதார அபிவிருத்தி, வலு மற்றும் உணவு உற்பத்தி, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் மனித உயிர்வாழ்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகின்றது. சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படும் நீரானது காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் தன்மையின் இதயத்திலும் உள்ளது.
“எதிர்காலத்துக்கான நீர்” என்பதே 2003ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருளாக அமைந்தது.
மனித குலத்துக்கும் பூமிக்கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளமாக அமைந்த போதிலும் அது வரையறுக்கப்பட்டதும் மற்றும் வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாததும் ஆகும். அதனால்தான் மனிதனின் எதிர்கால நல்வாழ்விற்கும், கடல்வளப் பாதுகாப்புக்கும் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் நீரின் நிலைத்தன்மை இன்றியமையாத ஒன்றாகும்.
2004ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருளாக அமைவது “நீரும் அனர்த்தமும்” என்பதாகும். பெரும்பாலான அனர்த்தங்கள் நீர் தொடர்பானவை வெள்ளம், நிலச்சரிவு, புயல், வெப்ப அலை, காட்டுத்தீ, கடும் குளிர், வறட்சி மற்றும் நீரால் பரவும் நோய்களின் தீவிரம் ஆகியவை பிரதானமாக காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி இடம் பெறுவதுடன் அவை மிகவும் தீவிரமாகவும் இருக்கின்றன.
2005ஆம் ஆண்டு உலக நீர் தினம் ‘பத்தாண்டு காலத்துள் வாழ்க்கைக்கான நீர்’ எனும் கருப்பொருளை வலியுறுத்தி நிற்கின்றது 2003ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2005 – 2015 காலப்பகுதியை “வாழ்க்கைக்கான நீர்” நடவடிக்கைக்கான “சர்வதேச தசாப்தம்”என அறிவித்தது.
2015ஆம் ஆண்டுக்குள் நீர் மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதே இந்த தசாப்பத்தின் முதன்மை நோக்கம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு “நீரும் கலாச்சாரமும்” எனும் கருப்பொருளுடன் உலக நீர் தினம் அமையப் பெற்றது. நீர் என்பது மனித குலத்தால் பேணப்படவேண்டிய ஒரு நன்கொடையாக சிலரால் கருதப்படும் அதேவேளை சுற்றுச் சூழலிற்கும் வனவிலங்குகளுக்குமான நீர் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பார்வையாக மற்றவர்களால் கருதப்படுகின்றது. நீருக்கும் இடத்துக்குமான தொடர்பு பெரும்பாலும் “தொடர்பு மதிப்புக்கள்” என வகைப்படுத்தப்படுகின்ற அதேவேளை உள்நாட்டுக் கலாசாரங்களில் மிகவும் வலுவாகவும் கருதப்படுகிறது.
“நீர் பற்றாக்குறையைச் சமாளித்தல்” எனும் கருப்பொருளைக் கொண்டு இடம்பெற்றது 2007ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர் தேசிய மற்றும் ஆற்றுப்படுக்கைகளின் மட்டத்திலான நடவடிக்கைகள் அவசியமானவை. இது உலகளாவிய மற்றும் சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை ஈர்க்கின்றது. அத்தோடு நீர் வளங்களின் பகிர்வு முகாமைத்துவம் மற்றும் அதன் நன்மைகள் என்பவற்றின் மூலம் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பினை அதிகரிக்க வழிவகுக்கிறது.
“சுகாதாரம்” எனும் கருப்பொருளுடன் 2008ஆம் உலக நீர் தினம் இடம்பெற்றது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட குழாய் நீர் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்புடன் கூடிய சாக்கடை இணைப்புக்கள் மூலமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதன் மூலம் வயிற்றுப் போக்கு இறப்புக்களைக் குறைத்து சுகாதாரத்தை சடுதியாக மேம்படுத்த முடியும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “எல்லை கடந்த நீர்” எனும் தொனிப்பொருளுடன் 2009ஆம் ஆண்டு உலக நீர் தினம் அமையப்பெற்றது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளால் பகிர்ந்துகொள்ளப்படும் நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுக்கைகள் எல்லை கடந்த நீர்வளம் ஆகும். அதிகரித்துவரும் நீர் அழுத்த சகாப்தத்தில் தவறாக நிர்வகிக்கப்படும் எல்லை தாண்டிய நீர் விநியோகங்கள் சமூக அமைதியின்மையையும் மோதலையும் மீண்டும் திறன் கொண்டவையாக அமைகின்றன.
காலநிலை மாற்றம் மற்றும் உலக சனத்தொகையின் அதிகரிப்பு என்பவற்றைச் சமாளிக்க மக்களினதும் சூழலினதும் தேவைகளை நிவர்த்தி செய்யும் எல்லை தாண்டிய நீர் வள முகாமைத்துவத்தில் அதிதேசிய ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம்.
2010ஆம் ஆண்டு உலக நீர் தினம் “ஆரோக்கியமான உலகிற்குச் சுத்தமான நீர்” எனும் கருப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. சுத்தமான நீரினைப் பெறுதல் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால், உலகில் நால்வருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இது ஒரு சுகாதாரப் பேராபத்து ஆகும். ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நீரினால் இறக்கின்றனர். நகர்ப்புற நீர் பயன்பாட்டுத் துறைகளில் வதிவிடங்கள், வர்த்தகம், தொழிற்சாலை, நிறுவனங்கள் மற்றும் பிற பயன்பாட்டுத்துறைகள் அடங்குகின்றன. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாத அல்லது சூழலுக்கு பயன்படுத்தப்படாத நீர் “நகர்ப்புற நீர்” எனக் கருதப்படுகிறது. எனவே குடிநீர்க்காகவும் கழிவகற்றலுக்காகவும் மற்றும் குளிப்பதற்காகவும் பயன்படுகின்ற நீர் “நகர்ப்புற நீர்” எனப்படும். 2011ஆம் ஆண்டு “நகர்ப்புற நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தினம் அமையப்பெற்றது. “நீரும் உணவுப் பாதுகாப்பும்” என்ற கருப்பொருளைத் தாங்கிநிற்கிறது 2012ஆம் ஆண்டு உலக நீர் தினம்.
உணவுப் பாதுகாப்புக்கு நீர் இன்றியமையாதது. பயிர்கள் மற்றும் கால்நடைகளின் வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியமானது. விவசாயத்திற்கு பாரியளவு நீர் தேவைப்படும் அதேவேளை பல்வேறு உணவு உற்பத்திக்கு தரமான நீர் அவசியமாகின்றது. மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற உலகின் அனைத்து நன்னீர்களின் 70 சதவீதமானவை பாசன விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. 2013ஆம் ஆண்டு உலக நீர் தினம் தனது கருப்பொருளை “சர்வதேச கூட்டுறவு ஆண்டு” அமைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகம் அமைதியானதும் நிலையானதுமான நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்வளப் பாவனை என்பவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
“நீர் மற்றும் வலு” எனும் தொனிப்பொருளினை விளக்கி நிற்கிறது 2014ஆம் ஆண்டு உலக நீர் தினம். நீர் மற்றும் அதன் வலு இரண்டுமே மனித உயிர் வாழ்விற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வளங்கள் ஆகும். குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் மிகவும் அவசியம் ஆகும். அதேவேளை போக்குவரத்து, வெப்பமாக்கல் மற்றும் மின்னுற்பத்திக்கு நீரின் வலு அவசியமாகின்றது. நிலையான அபிவிருத்தி, வாழ்வாதாரம், நீதி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில் என்பவற்றிற்கு நீர் மிகவும் இன்றியமையாத ஒரு திறவுகோல் ஆகும். சுத்தமான மற்றும் நிலையான நீர் வளங்களுக்குரிய வழிமுறை இன்னும் தளம்பல் நிலையிலே உள்ளது. அனைவருக்கும் சமமானதும் பாதுகாப்பான நீர் கிடைக்காமல் எந்தவொரு நிலையான அபிவிருத்தி என்ற ஒன்று இருக்கவே முடியாது. இதன் சாராம்சத்தை தழுவி நிற்கிறது 2015ஆம் உலக நீர் தினக் கருப்பொருளான “நீரும் நிலையான அபிவிருத்தியும்”.
2016ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருள் “சிறந்த நீர், சிறந்த தொழில்” என்பதை வலியுறுத்தி நிற்கிறது. இது நீருக்கும் தொழிலுக்கும் இடையான தொடர்புகளை மையமாகக் கொண்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களில் அண்ணளவாக ஐம்பது சதவீதமானோர் நீர் தொடர்பான துறைகளில் தொழில் புரிபவர்கள் ஆவர். அத்துடன் அவை யாவும் தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்தே அமைகின்றன. உண்மையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெரும்பாலான கழிவு நீரானது தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் நகராட்சிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இவை சுத்திகரிக்கப்படாமலே மீண்டும் சுற்றுச்சூழல் அமைப்பில் சேர்கின்றது. இந்த நிலையின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற 2017 உலக நீர் தினம் “ஏன் கழிவு நீர்” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது.
“நீருக்காக இயற்கை” என்ற கருப்பொருளை தாங்கி நிற்கிறது 2018க்கான உலக நீர் தினம். சுற்றுச்சூழல் அமைப்பினைப் பாதுகாப்பதே நீர்ப் பாதுகாப்புக்கான திறவுகோல் ஆகும்.
2030ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் மக்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான எமது திறனில் இது பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான தெளிவான பாதையை இயற்கை எமக்கு வழங்குகிறது. இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமும் அவற்றை மீளக் கட்டியெழுப்புதல் மூலமும் நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் இந்த நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்க முடியும். அதுமட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் முடியும்.
“யாரையும் விட்டு விடலாகாது” என்ற கருப்பொருளுடன் அமையப் பெற்றது, 2019ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். “யாரையும் விட்டுவிடக்கூடாது” என்ற உறுதிமொழியானது தீவிர வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலிருந்தும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு உறுதிப்பாடு ஆகும்.
“அனைவருக்கும் நீர்” என்பதே இக்கருப்பொருளின் மறுவடிவம். அதாவது, அதிக முன்னேற்றம் கண்டவர்கள் பின்தங்கியவர்களைக் கைவிடாமல் இருப்பதற்கான ஒரு சமூகப் பொறிமுறை உருவாக்கப்படல் அவசியம்.
2020ஆம் ஆண்டின் கருப்பொருளாக “நீரும் காலநிலை மாற்றமும்” என்றவாறு அமைகின்றது. நீர் நெருக்கடிக்கு பிரதான ஏதுவாய் விளங்குவது காலநிலை மாற்றம். கடும் வெள்ளம், கடல் மட்டம் உயர்தல், பனி நிலச் சுருக்கம், காட்டுத் தீ மற்றும் வறட்சி என்பவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தில் தாக்கங்களை நாம் உணர்கின்றோம். இருப்பினும், நீர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிடும். நீர் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துபவர்கள்தான் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கட்டுப்படுத்துகிறார்கள். மதிப்பிடுதல் என்பது நீர்வள முகாமைத்துத்துவத்தில் வலுவானதும் சமத்துவமும் மிக்கதான ஒரு முக்கிய அம்சம் ஆகும். வெவ்வேறான நீர்ப் பயன்பாடுகளின் நீரினை மதிப்பிடத் தவறியமை நீரின் அரசியல் புறக்கணிப்பிற்கும் அதன் தவறான முகாமைத்துவத்திற்கும் மூலகாரணமாக அமைகின்றது. 2021ஆம் ஆண்டு உலக நீர் தினம் “நீரின் மதிப்பீடு” எனும் கருப்பொருளில் அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
“கண்ணுக்குப் புலப்படாத நிலத்தடி நீரைப் புலப்படச் செய்தல்” எனும் கருப்பொருளைத் தாங்கி நிற்கிறது 2022ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். நிலத்தடி நீர் உலகளவில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத குடிநீரை வழங்குகின்றது. நாற்பது சதவீதமான நீர் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுகின்ற அதேவேளை மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைக்குப் பயன்படுகிறது. சுற்றுச்சூழலை தக்கவைப்பது மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்துக்கு ஈடு கொடுக்கவும் நிலத்தடி நீர் அவசியமாகின்றது. அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் மேற்பரப்பு நீரின் கிடைப்பனவின் நம்பகத்தன்மையும் (மனித செயற்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக) நிலத்தடி நீரின் மீது அதிக விசுவாசத்தையும் அழுத்தத்தையும் கொள்வதற்குக் காரணமாக அமைகின்றன.
2023ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருளாக “மாற்றத்தை துரிதப்படுத்தல்” என்றவாறு அமைகின்றது. நீர் மற்றும் சுகாதாரத்தின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு நிலையான நீர் முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்தும் முகமாக அரச நிறுவனங்களும் தனியார் துறைகளும் இணைந்து செயற்பட வேண்டும். நீர்ப்பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தல், நீர் மாசடைதலைக் குறைத்தல், சுத்தமான நீருக்கான வசதியினை உருவாக்கல் போன்றவற்றுக்கான உட்கட்டமைப்புக்களையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கு முதலீடு செய்தல் என்பதே “மாற்றத்தை துரிதப்படுத்தல்” என்பது கொண்டுள்ளது. அதனை அடைவதற்கு, சிறுமிகள் மற்றும் பெண்கள், கிராமப்புற மக்கள் ஆகியவற்றின் தேவைப்பாடுகள் கருத்திற்கொள்ளப்பட்டு சுத்தமான நீருக்கும் ஏற்ற சுகாதார வசதிக்குமான வழியமைத்தல் வேண்டும். புத்தாக்கத் தீர்வுகள் மற்றும் நிலையான நீர்த் தொழில்நுட்பங்கள் என்பவற்றில் முதலீடு செய்யும் சமூகம் தலைமையிலான நீர்ச் செயற்றிட்டங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும்.
பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினம் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு அமைந்ததை போன்றே இவ்வருடம் “சமாதானத்துக்கான நீர்” எனும் தொனிப்பொருளில் அமைகின்றது. நீர்ப் பற்றாக்குறையாக இருக்கும்போது அல்லது நீர் மாசடையும்போது அல்லது மக்கள் சமமின்மையை உணரும்போது அல்லது ஏற்ற வசதியில்லாதபோது சமூகங்களுக்கும் நாடுகளுக்குமிடையில் பதற்றம் உருவாகும். உலகளவில் மூன்று மில்லியனுக்கும் அதிகளவிலான மக்கள் சொந்த நாட்டின் எல்லைகளைக் கடக்கும் நீரை நம்பியுள்ளனர். எனினும், 24 நாடுகள் மட்டுமே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் சனத்தொகை என்பவற்றைச் சமாளிக்க நீர்வள நிலையப் பாதுகாப்புக்கும் அதை பேணுவதற்கும் நாடுகளுக்கிடையான அவசரத் தேவைகள் உள்ளன. பொதுச் சுகாதாரம் மற்றும் செழிப்பு, உணவு மற்றும் சக்தி அமைப்புக்கள், பொருளாதார உற்பத்தி மற்றும் சுற்றுச் சூழல் ஒருமைப்பாடு ஆகியவை நன்கு செயற்படுகின்றதும் சமத்துவ முகாமைத்துவம் மிக்கதுமான நீர்ச் சுழற்சியில் தங்கியுள்ளன.
சர்வதேச வலைப் பின்னல், அதாவது World Wide Web எனும் சொற்றொடரை மற்றும் றறற எனும் பதத்தை அறியாதவர்கள் உலகில் எவரும் இல்லை. மீண்டும் அதே பதம் றறற வேறு உள்ளடக்கம் கொண்டு வெளிவரக் காத்திருக்கிறது. அதாவது World Water War (உலக நீர் யுத்தம்) என்பதுதான். அப்படியொரு www உருவாகாமல் நீர் தொடர்பான சகல நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த நீரேந்தும் பூமிக்கிரகத்தில் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு உயிரினத்தினதும் தவிர்க்கமுடியாத தார்மீகப் பொறுப்பு ஆகும்.
– எந்திரி. எஸ்.ராஜ்குமார்
சிரேஷ்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், அம்பாறை பிராந்தியம்