நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 11 வருடத்துக்குப் பிறகு இப்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தைத் தயாரித்த சி.வி.குமார் இதையும் தயாரித்திருக்கிறார். மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம், மே மாதம் வெளியாக இருக்கிறது. படம்பற்றி தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் பேசினோம்.
முதல் பாகத்தோட தொடர்ச்சியாகத்தான் இந்தப் படம் இருக்குமா?
முதல் பாகத்துல கருணாகரன் அமைச்சராகி இருப்பார். இந்த பாகத்துக்கும் முதல் பாகத்துக்குமான தொடர்பே அவர்தான். போன பார்ட்ல விஜய் சேதுபதி பண்ணின ஒரு பிரச்சினை, இதுல மிர்ச்சி சிவாவுக்கு சிக்கலா வந்து சேரும். அதுல இருந்து மீளஇவங்க என்ன பண்றாங்கன்னு கதை போகும். ஒரு விஷயத்தை சாதிக்கணும்னா, சூது பண்ணினாதான் முடியும்ங்கற நிலைமை இருக்கு. அதாவது நேர்மைக்கான அளவுங்கறது மாறிகிட்டே இருக்குது. ‘திருடினா தப்பு, பசிக்கு திருடினா தப்பில்லை’ன்னு சொல்ற மனநிலை இருக்குல்ல, அதை இன்னொரு பாணியில சொல்றபடமா இது இருக்கும்.
இதுல ஏன் விஜய் சேதுபதி நடிக்கலை?
‘சூது கவ்வும்’ முதல் பாகத்துல விஜய் சேதுபதி கேரக்டருக்கு இயக்குநர் நலன் குமாரசாமி கேட்டது ‘லொள்ளுசபா’ மனோகரை. நாங்க, யூகிசேதுவை வச்சாவது பண்ணுங்கன்னு நலன்கிட்ட சொன்னோம். அவர், ‘இல்ல சார் நான் மனசுல வச்சிருக்கிற கேரக்டருக்கு மனோகர்தான் செட் ஆவார்’னு சொல்லிட்டார். பிறகு, நான், கார்த்திக் சுப்புராஜ் எல்லோரும் நலனை சமாதானப்படுத்தி விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். விஜய் சேதுபதி கதையை கேட்டுட்டு உடனே பண்றேன்னு சொல்லிட்டார். அப்படித்தான் விஜய் சேதுபதி இதுக்குள்ள வந்தார். இந்தக் கதை 1987, 2008, பிறகு சம காலத்துல நடக்கிற மாதிரி போகும். இதுக்கு மிர்ச்சி சிவா சரியாக இருந்தார். அதனால அவரையே ஹீரோவாக்கிட்டோம்.
இரண்டாம் பாகத்துக்கு ஏன் இவ்வளவு வருஷம் ஆச்சு?
நலன் குமாரசாமி முதல்ல கதை சொல்லும்போதே, 2 பார்ட் படமா பண்ணலாம்னுதான்னு வந்தார். முதல் பார்ட், சூது கவ்வும், இரண்டாவது பார்ட், தர்மம் வெல்லும். இதுதான் திட்டமா இருந்தது. சூது கவ்வும் முடிஞ்சதுமே, இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணினோம். ஆனா, ஏப்ரல் மாசம் ஷூட்டிங்குன்னு முடிவுபண்ணி ரெடியா இருக்கும்போது, மார்ச்மாதம் நலன் சொன்னார், “சார், இது ஒரு சிக்கலான ஸ்கிரிப்ட், இப்ப இருக்கிற மனநிலையில அதை சரியா பண்ண முடியலை’ன்னு. அதனால நாங்க ஏற்கெனவே ரீமேக் பண்ண வாங்கி வச்சிருந்த கொரிய படத்தை நலன் குமாரசாமி இயக்கத்துல ‘காதலும் கடந்து போகும்’னு ரீமேக் பண்ணினோம். பிறகு இரண்டாம் பாகத்தை, எங்க இருந்து எப்படி ஆரம்பிக்கணும்னு நலன் ஒரு ஐடியா சொன்னார். அதை எழுதி தர்றேன்னும் சொன்னார். அதுக்குள்ள அவர் கார்த்தி படத்துக்கு போயிட்டார். அதனாலஇயக்குநர் அர்ஜுனன்கிட்ட அதை டெவலப் பண்ண சொன்னேன். மூனு வருஷமா பண்ணி, பிறகு ஷூட்டிங் போனோம்.
நீங்க ஏற்கெனவே சில படங்களை இயக்கி இருக்கீங்க. இதை ஏன் இயக்கலை?
இந்த மாதிரி படங்களை பண்றதுக்கு உண்மையிலயே தனி திறமையும் தைரியமும் வேணும். எனக்கு அது இல்லை. காமெடிபடத்தை இயக்கறது சாதாரண வேலையில்லை. இந்தப் படத்தை இயக்கி இருக்கிற அர்ஜுனன், முண்டாசுப்பட்டி படத்துல அசிஸ்டெண்ட்டா வேலை பார்த்தவர். ராட்சசன், மார்க் ஆண்டனி படங்களோட ஸ்கிரிப்ட்ல இவர் பங்களிப்பும் இருக்கு. பிரபுதேவா, தங்கர்பச்சான் நடிப்புல ‘யங் மங் சங்’ படத்தை ஏற்கெனவே இயக்கி இருக்கார்.இன்னும் ரிலீஸ் ஆகலை. திறமையானவர். அவர் திறமையை இந்தப் படத்துல பார்ப்பீங்க.
முதல் பாகத்துல ஹீரோயினை கற்பனை கேரக்டரா வச்சிருப்பீங்க… இதுலயும் அது தொடருமா?
கண்டிப்பா. மிர்ச்சி சிவாவோட கற்பனைகேரக்டரா கதாநாயகி கேரக்டர் வரும். அந்தகதாபாத்திரத்துல ஹரீஷா நடிச்சிருக்காங்க. அந்த கேரக்டரும் இதுல நல்லா அமைஞ்சிருக்கு. இந்தப் படத்துல சில விஷயங்கள் முதல் பாகத்தோட தொடர்ச்சியாகவே இருக்கும். அல்லது அந்தப் படத்துல நடந்த விஷயங்களுக்கு இதுல காரணம் இருக்கும். முதல்பாகத்துல டார்க் காமெடி அதிகமா இருக்கும். இதுல அதுவும் இருக்கும், வெளிப்படையான காமெடியும் இருக்கும். அனைவரும் ரசிக்கும்படியான படமா இருக்கும்.
இரண்டாம் பாகம் பற்றி விஜய் சேதுபதி ஏதும் சொன்னாரா?
அவர்கிட்ட பேசிட்டுதான் இருக்கிறேன். ‘சூது கவ்வும்’ மூன்றாவது பாகமான ‘தர்மம் வெல்லும்’ பண்றீங்களான்னு கேட்டேன். கதையை முடிச்சுட்டு வந்து சொல்லுங்க. நல்லாயிருந்தா பண்றேன்னு சொல்லியிருக்கார்.