போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு, தமிழகத்தில் அமீர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.