சகல வரிகளும் நீங்கலாக 92 ரூபாய்க்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாவுக்கு விற்று சுரண்டி பிழைக்கும் செயற்பாட்டை வர்த்தகர்கள் இனியேனும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மாத்திரம் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் 8000 கோடி ரூபா இலாபமடைந்துள்ளார்கள். அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தில் 36 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம் என வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற குழு அறையில் செவ்வாய்க்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஒருசில வர்த்தகர்கள் ஈடுபடுகிறார்கள்.அத்தியாவசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையவில்லை.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்து மத்திய வங்கி,நுகர்வோர் அதிகார சபை,தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை (2) பாராளுமன்ற வழிவகைகள் வழிவகைகள் பற்றிய குழுவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தோம்.
2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சகல வரி நீங்கலாக பெரிய வெங்காயம் ஒருகிலோகிராம் 92 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு ஒருகொடவத்தையில் 365 ரூபாவுக்கும்,மீபேவில் 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் 700 ரூபா உயர்ந்தபட்ச சில்லறை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரி நீங்கலாக ஒருகிலோகிராம் உருளைக்கிழங்கு 110 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு 203 ரூபாவுக்கும்,காய்ந்த மிளகாய் 496 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு 1307 ரூபாவுக்கும், ஒருகிலோகிராம் மாசி 841 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு 3160 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முதனிலை இறக்குமதியாளர்கள் சுரண்டிப் பிழைக்கிறார்கள்.2023 ஆம் ஆண்டு மாத்திரம் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் 8000 கோடி ரூபா இலாபமடைந்துள்ளார்கள்.அதேபோல் உருளைக்கிழங்கு இறக்குமதியாளர்கள் 1500 கோடி ரூபா,காய்ந்த மிளகாய் இறக்குமதியாளர்கள் 1800 கோடி ரூபா என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளார்கள்.
அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் பெற்றுக்கொண்ட இந்த இலாபம் அரச வரி வருமானத்துக்கு பங்களிப்பு செய்துள்ளதா? என்பதை அறியவில்லை. ஆகவே இந்த இலாபத்தில் 36 சதவீதத்தை மீளப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமபறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.அதேபோல் இவர்களின் பெயர் பட்டியலை இறைவரித் திணைக்களத்துக்கு வழங்குவமாறு சுங்கத்திணைக்களத்துக்கு குறிப்பிட்டுள்ளோம்.
புத்தாண்டு காலத்தில் மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் . இந்தியாவில் இருந்து 25 ரூபாவுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாவுக்கு விற்கும் முறையற்ற செயற்பாட்டை இனியேனும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு உணவு பொதிக்கான உண்மை செலவு,வர்த்தகர்கள் மோசடி செய்யும் தொகை உள்ளிட்ட விடயங்களை இனிவரும் காலங்களில் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.