ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். அதேபோன்று தெற்கிலும், குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும் இச்சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரும், தெற்கில் ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன) கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினராலும், அவர்களை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் அமைப்புக்களாலும் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக தாம் சந்திக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களைத் திரட்டிவருவதாகவும், அத்தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிப்பதாகவும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினருடன் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் ஏப்ரல்மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இச்சந்திப்புக்கள் எப்போது ஆரம்பமாகும் என நேற்று முன்தினம் (1) அவரிடம் வினவியபோது, பாதிக்கப்பட்ட தரப்பினரில் சகலரையும் உள்வாங்கும் வகையில் விபரங்கள் திரட்டப்பட்டுவருவதாகவும், முதலில் தெற்கிலும், அதனைத்தொடர்ந்து வட – கிழக்கிலும் பாதிக்கப்பட்ட தரப்பினரை தாம் சந்திக்கவுள்ளதாகவும் பதிலளித்தார்.
அதேவேளை அடுத்தவாரம் ஐரோப்பாவுக்குப் பயணமாகவுள்ள யுவி தங்கராஜா, லண்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களைச் சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.