நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இளம் உலகத் தலைவராக (Young Global Leader) உலகப் பொருளாதார மன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை, உலகப் பொருளாதார மன்றம் வியாழக்கிழமை (04) அறிவித்துள்ளது.
இலங்கை அமைச்சர் ஒருவர் இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இளம் உலகத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை ஜீவன் தொண்டமான் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இளம் உலகத் தலைவராக சமூகம் என்பது உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைப்பதில் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் 1,000 க்கும் மேற்பட்ட இளம் தலைவர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான சமூகமாகும்.
இந்த இளம் உலகத் தலைவர் திட்டம் எதிர்காலத்தை வடிவமைக்கும் 40 வயதுக்குட்பட்ட நம்பிக்கைக்குரிய தலைவர்களை அடையாளப்படுத்துகிறது. கடந்த காலத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், அலி பாபா நிறுவனரும் தொழில்நுட்பத் தொழிலதிபருமான ஜேக் மா மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் உலகளாவிய சிறந்த இளம் தலைவர் பட்டியலில் அடங்குவர்.