பார்த்திபன் இயக்கியுள்ள சாகச த்ரில்லர் படம், ‘டீன்ஸ்’. டி.இமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் டிரெய்லர் மற்றும் இசை சென்னை கமலா திரையரங்கில் தொடர்ந்து 4 காட்சிகளாக வெளியிடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
அதற்கான சான்றிதழ் உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.
13 குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், கே.பாக்யராஜ், சரண், பேரரசு, கவுரவ் நாராயணன், வனிதா விஜயகுமார், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், யோகிபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது, “பார்த்திபன் படங்களுக்காக எடுக்கும் விழாக்களைப் புதுமையாகச் செய்து கொண்டிருப்பார். ஒரு நாள் பார்த்திபனிடம் , ‘இதுக்கு யோசிக்கிற மாதிரி படத்துக்கும் யோசித்தால் வேற மாதிரி வருவாய்’ என்று சொன்னேன்.
அதற்குப் பிறகு ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக யோசித்து, ஒத்த செருப்பு, சிங்கிள் ஷாட் படம் என தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பார்த்திபன் என்ன செய்தாலும் அவர் என் அசிஸ்டென்ட் என்பதால் எனக்கும் பெயர் வந்துகொண்டிருக்கிறது.
அவர் எதைச் செய்தாலும் அதில் புதுமை வந்துகொண்டே இருக்கும். இது எனக்கும் பெருமை” என்றார்.