தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம் எனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களின் தேசிய பிரச்சனை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை உண்டு. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம்.
தமிழ் மக்களின் பிரச்சனையை இனம் கண்டுள்ளோம். அதற்கான தீர்வினை பரிந்துரை செய்யவுள்ளோம். தீர்வு என்ன என்பதை மிக விரைவில் தெரியப்படுத்துவோம்.
தற்போது அது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அடுத்து தமிழ் கட்சிகளோடு பேசவுள்ளோம்.
தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய சுய விருப்பம். ஆனால் பொதுவான நிலைப்பாடு மாற்றம் வேண்டும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.
கடந்த 75 ஆண்டுகளாக நீலம்,பச்சை என மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள். எனவே மாற்றம் வேண்டும் என பெரும்பாலான மக்கள் சிந்திக்கின்றனர்.
அநுர தான் அடுத்தது எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மாற்றத்தையே ஒட்டு மொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளர் பேசுவது மீண்டும் நீலம் , பச்சையைத் தான் வீறு கொள்ள வைக்கும். ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறோம் என்றார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போது, எமது மாநாட்டிற்குக் கட்சி பேதமின்றி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.
யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாநாட்டிற்கு வருகை தந்தார். வந்தவரை நாம் வரவேற்றோம் எனத் தெரிவித்தார்.