பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் போட்டியிடுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸில் போட்டியிடும் முதல் திரைப்படம் இதுவாகும்.
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் வரும் மே 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ தங்கப்பனை விருதுக்காக போட்டியிடுகிறது.
இதே பிரிவில், புகழ்பெற்ற இயக்குநர்களாக பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் ’மெகாபொலிஸ்’, ஷான் பேக்கரின் ‘அனோலா’, ‘யார்கோஸ் லான்திமோஸின் ‘கைண்ட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ்’ உள்ளிட்ட படங்களும் போட்டியிடுகின்றன.
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து கேன்ஸ் விழாவில் தங்கப்பனை விருதுக்குப் போட்டியிடும் முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ தக்கவைத்துள்ளது. இதற்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஷாஜி என்.கருண் இயக்கிய ‘ஸ்வாஹம்’ படம் கேன்ஸ் விழாவில் போட்டியிட்டது.
பாயல் கபாடியா இயக்கிய ’எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ என்ற ஆவணப்படம் 2021 கேன்ஸ் விழாவில் ‘கோல்டன் ஐ’ விருதை வென்றது. ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ படத்தில் கனி கஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.