யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், நேரடியாக படம் இயக்கும் இயக்குநர்கள் வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் வெங்கடேஷ்வர ராஜ். அவர் இயக்கி இருக்கும் ‘சிறகன்’ என்ற கிரைம் த்ரில்லர் படம் வரும் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.
படம் பற்றி பேசினார் வெங்கடேஷ்வர ராஜ்.
“மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா படிச்சுட்டு நேரடியாக எடிட்டிங் பண்ணஆரம்பிச்சுட்டேன். சில படங்களுக்கும் விளம்பர படங்களுக்கும் எடிட்டிங் பண்ணினேன். படம் இயக்கும் ஆசை ஏற்கெனவே இருந்தது. உதவி இயக்குநரா இல்லைன்னாலும் சினிமா பற்றிநிறைய கவனிச்சுக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல எனக்கேநம்பிக்கை வந்ததும் ஆரம்பிச்சிட்டேன்” என்கிறார், வெங்கடேஷ்வர ராஜ்.
அது என்ன ‘சிறகன்’? அப்படின்னா என்ன?
அது ஒரு நாள் மட்டுமே வாழும்பட்டாம்பூச்சி வகை. முதல்ல, ‘பட்டாம்பூச்சி’ன்னு தலைப்பு வைக்க நினைச்சோம். அதே தலைப்புல வேற படம் வந்துட்டதால ‘சிறகன்’ங்கற தலைப்பை தேர்வு பண்ணினோம். இந்த, ‘பஞ்சன் சிறகன்’ வகை பட்டாம்பூச்சிகளோட ஒரு பக்க சிறகு, கருப்பு வெள்ளையாகவும் இன்னொரு பக்கம் காக்கி நிறத்துலயும் இருக்கும். கதைக்கும் அது அப்படியே பொருந்தியதால அதையே தலைப்பா வச்சுட்டோம்.
இந்தப் பட்டாம்பூச்சி வகை, கதைக்கு எப்படி தொடர்பாச்சு?
வழக்கறிஞருக்கும் போலீஸுக்கும் இடையிலான பிரச்சினைதான் இந்தப் படத்தோட கதை. வழக்கறிஞருக்கு கருப்பு, வெள்ளை, போலீஸுக்கு காக்கி. இரண்டு வண்ணங்களையும் கொண்ட தலைப்பு அது. எனக்கு தெரிஞ்சஉண்மை நிகழ்வுகள் அடிப்படையில நிறைய கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கேன். 11 கேரக்டர்களை சுற்றிதான் கதை நடக்கும். ஹைபர் லிங்க் முறையிலான கதை. அதோட நான் லீனியராகவும் அதாவது முன்னும் பின்னும் போயிட்டு வர்ற மாதிரி திரைக்கதை இருக்கும்.
ஹைபர் லிங்க், நான் லீனியர் பார்வையாளர்களைக் குழப்பாதா?
குழப்பாது. அடிப்படையில நான் எடிட்டர் அப்படிங்கறதால, எனக்கு சவாலான இடம், படத்துல வேணும்னு நினைச்சேன். இந்தக் கதை அப்படி அமைஞ்சது. 11 கோணங்கள்ல திரைக்கதை அமைச்சு எடுத்திருக்கோம். பார்வையாளர்களுக்கு இது புதுசா,சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். எந்த குழப்பமும் இல்லாம, சுவாரஸ்யமா படம் இருக்கும்.
நீங்களே தயாரிச்சிருக்கிறீங்களே..?
முதல் பட இயக்குநருக்கு தயாரிப்பாளர் கிடைக்கறது கஷ்டம்னு எல்லாருக்கும் தெரியும். நானும் சில தயாரிப்பாளர்களைப் பார்த்தேன். அவங்க, ‘இது பரிசோதனை முயற்சி படம் மாதிரி இருக்கு.நான் லீனியர் இல்லாத நேரடியான ஒரு கதையை கொண்டு வாங்க, பண்ணுவோம்’னு சொன்னாங்க. அதனால நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சுட்டேன். என் கனவுக்கு குடும்பத்து ஆதரவு அதிகம். அவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.
நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பற்றி..?
கஜராஜ், ஜீவாரவி, பவுசி ஹிதாயா, வினோத், ஆனந்த் நாக், ஹர்ஷிதா ராம், பாலாஜின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ‘சேட்டை’ சிக்கந்தர் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ராம் கணேஷ் இசை அமைச்சிருக்கார். கூழாங்கல் படத்துக்கு சிறந்த சவுண்ட்எபெக்டுக்காக விருது வாங்கியஹரி பிரசாத், இந்தப் படத்துக்கும்சவுண்ட் மிக்ஸ் பண்ணியிருக்கார். இன்னொரு எதிர்பாராத ஒற்றுமை என்னன்னா, இதுல வேலைபார்த்த எல்லா டெக்னீஷியன்களுக்கும் வயது 27-தான்!