தனது கனவுகளை வெள்ளித்திரையில் ஒளிரவைக்க கோடம்பாக்கம் நோக்கி புறப்படும் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நிகழும் ஏற்ற, இறக்க திரையுலக பயணமே வருடங்களுக்குப் பிறகு என்று பொருள்படும் ‘வருஷங்களுக்கு சேஷம்’ (Varshangalkku Shesham) மலையாள படத்தின் ஒன்லைன்.
கேரளாவின் குக்கிராமத்தில் 70-களில் தொடங்கும் கதையில் கல்வியில் நாட்டமில்லாத வாசு (தயான் ஸ்ரீனிவாசன்) கலையின் பக்கம் தன் கவனத்தை திருப்புகிறார். எழுத்தில் ஆர்வம் கொண்டும் திரியும் அவரையும், இசையில் ஆர்வம் கொண்டிருக்கும் முரளியையும் (பிரணவ் மோகன்லால்) காலம் ஒன்று சேர்க்கிறது. திரையுலகில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட இருவரும் கேரளாவிலிருந்து புறப்பட்டு சினிமாவின் கூடாரமான கோடம்பாக்கத்துக்குள் நுழைகின்றனர்.
பலமுறை தட்டிய பின் மூடப்பட்ட கதவுகள் ஒருநாள் திறக்க, வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், திரையுலகம் ஒருவரை மட்டும் அணைத்துக்கொண்டு தனது விளையாட்டை தொடங்க, மற்றவரின் பாதை என்ன ஆனது? இருவருக்குள்ளும் இருந்த நட்பின் இறுக்கம் கூடியதா, குறைந்ததா என்பதே திரைக்கதை.
அந்நியர்களாக தொடங்கி முதுமை வரை தொடரும் இரண்டு நண்பர்களின் அந்நியோன்யமான நட்பையும், அவர்களின் திரையுலக பயணத்தையும், அதில் நிகழும் ஏற்ற, இறக்கங்களையும், புகழ் போதையையும், வீழ்ச்சியையும், முரணையும் முடிந்த அளவுக்கு நேர்த்தியாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன். வறட்சியான காட்சிகளில் ‘அயற்சி’ தொற்றுக்கொள்ளாத படம் முழுக்க பயணிக்கும் நகைச்சுவையை படத்துக்கு பலம்
கோடம்பாக்கத்தில் இருவரும் வந்திறங்கியதும் ‘எம்ஜிஆர்’, ரஜினிகாந்த் ரெஃபரன்ஸ், திரையுலகில் இருக்கும் நாயக ஆதிக்க மனநிலை, 70-களை கண்முன் நிறுத்தும் கலை ஆக்கம், உடைகள், டேப்ரீகார்டுகள், வாகனங்கள், கேசட்டுகள் என நாஸ்டால்ஜி அனுபவத்தை தரும் மேக்கிங் ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்குப் பிறகு பெரிய அளவில் முரணோ, சவாலோ இல்லாததால் தொய்வு எட்டிப் பார்க்கிறது.
அதனை ஈடுசெய்ய நிவின் பாலியையும், பசில் ஜோசப்பையும் இறக்கி ‘மல்டிஸ்டார்’ கதைக் களமாக்கியிருப்பது நல்ல யுக்தி. குறிப்பாக நிவின் பாலியின் காமெடி காட்சிகள், ‘நெப்போடிசம்’, ‘உருவகேலி’ தொடர்பாக அவர் பேசும் வசனங்கள் அட்டகாசம்! தவிர்த்து, இரண்டு நண்பர்கள் பிரிவதற்கான காரணத்தில் வலுவில்லை. அதேபோல, அடிக்கடி பிரணவ் தொலைந்துபோவதும், தயான் அவரைத் தேடிச் செல்வதும், பேருக்காக கல்யாணி பிரியதர்ஷனை கொண்டுவந்ததும் நேரத்தை வீண்டிக்கும் முயற்சி. உணர்வுபூர்வமான காட்சிகளில் அழுத்தமில்லை.
கனவு, ஏக்கம், ஆர்வம், குற்றவுணர்வு மற்றும் முதுமையில் நிதானத்தை தனது நடிப்பில் கொண்டு வந்து கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறார் தயான் ஸ்ரீனிவாசன். விரக்தி மனநிலையையும், இயலாமையின் உணர்வுகளையும் கச்சிதமாக கடத்தியிருக்கிறார் பிரணவ் மோகன்லால்.
இருவருக்குமான கெமிஸ்ட்ரி திரையில் கைகொடுக்கிறது. பெயரளவில் கதாபாத்திரமாக வந்து செல்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். அப்பாவித்தனத்திலும், டைமிங் காமெடியிலும் ஈர்க்கிறார் நிவின் பாலி. பசில் ஜோசப், அஜூ வர்கீஸ், வினீத் ஸ்ரீனிவாசன் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சையை மையமிட்டு நகரும் திரைக்கதையில் அம்ரித் ராம்நாத் ‘ஞாபகம் மோதுதே’ பாடலின் வழியே நினைவுகளையும், நட்பின் ஆழத்தையும் மீட்டுகிறார். சிவப்பு நிற ஒளியில் மிளிரும் முகங்களையும், இரவின் அடர்த்தியையும், கேரள – தமிழக நிலப்பரப்பின் அசல்தன்மையை ஒருவித அழகியலோடு திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கத்தில். முன்னும் பின்னும் காட்சிகளை கோர்த்ததில் ரஞ்சன் ஆப்ரஹாமின் படத்தொகுப்பில் நேர்த்தி.
திரையுலக கனவுகளைச் சுமந்து சாதிக்க நினைக்கும் இருவரின் வாழ்க்கைச் சிக்கல்களை உணர்வுபூர்வமாகவும், அழுத்தமான காரணங்களுடனும் சொல்லியிருக்கலாம். படம் நெடுங்கிலும் ஆங்காங்கே ரசிக்க சில விஷயங்கள் இருந்தாலும், முழுமையான படமாக எங்கேஜிங்காக கவனிக்க வைக்கிறதா என்றால், அது கேள்விக்குறியே!