15-20 நாட்களுக்கு முன்பு பாஜக 180 இடங்களை வெல்லும் என்று நினைத்தேன்.
ஆனால் இப்போது 150 இடங்களே கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்.17) உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பொதுவாக நான் தேர்தலில் வெற்றிக்கான சீட்களை கணிப்பதில்லை.
15-20 நாட்களுக்கு முன்புவரை பாஜக 180 இடங்களைக் கைப்பற்றும் என்று நினைத்தேன்.
ஆனால் இப்போது 150 இடங்களே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து வரும் அறிக்கைகளின் படி நாங்கள் முன்னேறி வருகிறோம்.
உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் மிகவும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை பிரதமர் மோடி குறைத்துவிட்டார்.
வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவதே எங்களின் முதல் பணியாகும். அதற்காக 23 யோசனைகளை எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
அதில் ஒன்று பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி வழங்கும் யோசனை.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளோம். பயிற்சி எடுக்கும் இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி, “தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே தேர்தல் பத்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இத்திட்டம்தான் உலகிலேயே மிகப்பெரிய கொள்ளையடிக்கும் திட்டம் என்பது இந்திய தொழிலதிபர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த விஷயத்தில் பிரதமர் எவ்வளவுதான் தெளிவுபடுத்தினாலும், ஊழலின் சாம்பியன் பிரதமர் என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் தெரியும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி. எனக்கு கட்சி தலைமையிடம் இருந்து எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன்.
எங்கள் கட்சியில், வேட்பாளர் தேர்வு முடிவுகள் அனைத்தும் கட்சித் தலைமையால்தான் எடுக்கப்படுகின்றன.” என்று தெரிவித்தார்.
மாற்றத்தின் காற்று.. இதேபோல் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக வலுவான அடித்தளம் அமைந்துள்ளது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து காஜிபூர் வரை மாற்றத்தின் காற்று வீசத் தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு பிரியாவிடை வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டாக எதிர்கொள்கின்றன. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.