தமிழ்நாட்டில் மற்ற மொழித் திரைப்படங்கள் எப்போதாவது வசூல் குவிப்பதுதான் வழக்கம். தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிறமொழி ஹீரோக்கள் நடித்த சில படங்கள், இப்படி ஹிட்டாகி இருக்கின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அப்படித்தான். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் புது ட்ரெண்ட் உருவாகி இருக்கிறது. நேரடி மலையாளத் திரைப்படங்களே இங்கு அதிக வசூல் குவித்து வருகின்றன.
கிரிஷ் ஏ.டி இயக்கிய ‘பிரேமலு’ என்ற மலையாளப் படம், பிப்.9-ம் தேதி வெளியானது. தமிழ்நாட்டிலும் மலையாளப் பதிப்பே வெளியாகி வரவேற்பைப் பெற, தமிழ்ப் படங்களைத் தூக்கிவிட்டு அந்தப் படத்துக்குத் திரையரங்குகள் முக்கியத்துவம் கொடுத்தன. 5 வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடியது. இதன் வெற்றியை அடுத்து இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டனர். ஒரிஜினலுக்கு கிடைத்த வரவேற்பு, டப்பிங் ‘பிரேமலு’வுக்கு கிடைக்கவில்லை.
‘மஞ்சும்மள் பாய்ஸ்’ பிப்.22ம் தேதி வெளியானது. சவுபின் ஜாகிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்த இந்தப் படம் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட். இதன் வசூல், தமிழ் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் படத்தைப் பாராட்டியதும் இதன் அதிகப்படியான வெற்றிக்குக் காரணம்.
பிருத்விராஜ் நடித்து பான் இந்தியா முறையில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ தமிழ்நாட்டிலும் வரவேற்பைப் பெற்றது. தமிழ்ப் பேசி வெளியானதை விட, மலையாள மொழியிலேயே இந்தப் படம் 2 வாரங்களுக்கு மேல் நன்றாக ஓடியது.
கடந்த வாரம் வெளியான ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’, வினித் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தியான் சீனிவாசன் நடித்த ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படங்களும் இப்போது வசூல் குவித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக வெளியான எந்த தமிழ்ப் படமும் சரியில்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, அந்த இடங்களை இந்தப் படங்கள் பிடித்துள்ளன.
இதுபற்றி விநியோகஸ்தர் ஒருவரிடம் கேட்டபோது, “நல்ல கதையை கொண்ட படங்களுக்கு, அது மற்ற மொழி படங்களாக இருந்தாலும் சரி, தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தெரிவிப்பார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சில மாதங்களாக ஒவ்வொரு வாரமும் 7, 8 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன.
சரியான கதை இல்லாததால் இந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. பல திரைப்படங்களுக்கு வெளியான முதல் நாளே, காட்சிகளை ரத்து செய்யும் நிலைதான் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மலையாளப் படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக இருப்பதால் ரசிகர்கள் தேடி வருகின்றனர். தேர்தல், ஐபிஎல் ஆகியவற்றைத் தாண்டியும் இந்தப் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டி வருகின்றன” என்றார் .