தமிழகத்தில் 40.05% வாக்குப்பதிவு

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 44.08 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 32.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு – பிற்பகல் 1 மணி நிலவரம்:
கள்ளக்குறிச்சி – 44.00%
திண்டுக்கல் – 41.97%
நாமக்கல்- 43.66%
கரூர்- 43.60%
சேலம்- 43.13%
விழுப்புரம்- 42.89%
தருமபுரி – 44.08%
பெரம்பலூர் – 43.32%
ஆரணி – 43.62%
திருப்பூர் – 40.96%
விருதுநகர் – 42.34%
ஈரோடு – 42.23%
சிதம்பரம் – 42.09%
பொள்ளாச்சி -41.34%
தேனி – 41.24%
தஞ்சாவூர்- 40.81%
திருவள்ளூர் – 40.12%
திருவண்ணாமலை – 41.46%
நாகப்பட்டினம் – 41.43%
கிருஷ்ணகிரி – 41.55%
மயிலாடுதுறை – 40.77%
அரக்கோணம் – 41.92%
திருச்சி – 39.91%
கன்னியாகுமரி – 40.24%
வேலூர் – 41.24%
கடலூர் – 40.32%
காஞ்சிபுரம் – 39.41%
கோவை – 39.51%
தென்காசி – 40.15%
சிவகங்கை – 40.15%
தூத்துக்குடி – 24.16%
நீலகிரி – 40.14%
ராமநாதபுரம் – 39.60%
திருநெல்வேலி – 38.27%
ஸ்ரீபெரும்புதூர் – 37.40%
மதுரை – 37.11%
வட சென்னை – 35.09%
தென் சென்னை – 33.93%
மத்திய சென்னை – 32.31%
மொத்தம் – 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது.

—–

பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தில், பாஜக – திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 3 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் (ஏப்.19) இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.

இந்தத் தாக்குதலில் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், கல் வீச்சு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த அனந்த் பர்மன் என்ற உள்ளூர் பிரமுகர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தொண்டர்களால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்க்க மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வாக்காளர்களை மிரட்டுவதாகவும், வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பதாகவும், பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் – ஃபுல்பாரி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

3 தொகுதிகளில் கூச் பெஹார் தொகுதியில் அதிகளவிலான வன்முறை புகார்கள் எழுந்துள்ளதாக, மேற்கு வங்க ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதோடு, “எங்களுக்கு ஒரு சில புகார்கள் வந்துள்ளன, ஆனால் இதுவரை வன்முறைகள் குறித்து எங்களிடம் எந்த புகாரும் இல்லை. காலை 11 மணிக்கு சராசரியாக 33.56% வாக்குகள் பதிவாகியிருந்தன” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஜக தேர்தல் வன்முறை தொடர்பான புகார்களுக்கு ஹெல்ப்லைன் ஒன்று அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து வாக்குப்பதிவை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கண்காணித்து வருவதாக திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

—–

மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாட்டின் 18-வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கி உள்ளது. அதற்காக நாடு முழுவதும் முதல்கட்டமாக 102 தொகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் மணிப்பூரின் உள்பகுதிகளில் உள்ள மக்களவைத் தொகுதிகளிலும், வெளிப்புறமுள்ள சில பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆவலுடன் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இதனிடையே, அங்கு நடந்திருக்கும் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் வாக்காளர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வைரலாகி வரும் வீடியோவில், துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் வாக்களர்கள் சிதறி ஓடுவது பதிவாகியுள்ளது. அதேபோல் பிஷ்ணுபூர் தொகுதியில் வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினர்.

Related posts