டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ்(முன்பு ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக இருந்தது. இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். முன்னதாக கடந்த வாரம் எலான் மஸ்க் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை 2 – 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவில் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி மையத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கார்களுக்கான இறக்குமதி வரியை சமீபத்தில் மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இதேபோல், அதிவேக இணைய இணைப்புக்கான ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
எலான் மஸ்க்கின் வருகை இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய ஊக்கமளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “துரதிர்ஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.