இலங்கையின் பொருளாதார மீட்சியானது இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்புக்களின் தொடர்ச்சித் தன்மையிலேயே தங்கியிருக்கிறது. எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முக்கிய மறுசீரமைப்புக்களிலிருந்து பின்வாங்குவதானது, நாட்டை பொருளாதாரத்தை ஸ்திரமற்ற நிலையின் எல்லைக்குக் கொண்டுசெல்லும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80ஆம் பிரிவின்படி 2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மற்றும் 99ஆம் பிரிவின்படி கடந்த ஆண்டுக்கான மத்திய வங்கியின் நிதியியல் கூற்றுக்கள் என்பன நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
இப்பொருளாதார மீளாய்வு அறிக்கையானது 3 அத்தியாயங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதலாம் அத்தியாயத்தில் பேரண்டப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தின் நிதியியல் முறைமை நிலை குறித்தும், இரண்டாம் அத்தியாயத்தில் நாணயக்கொள்கை வழிமுறைகள், வெளிநாட்டுத்துறைக் கொள்கைகள், நிதியியல்துறைக் கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய நாணயக்கொள்கை கட்டமைப்பு குறித்தும், மூன்றாம் அத்தியாயம் பேரண்டப் பொருளாதாரத் தோற்றப்பாடு குறித்தும் பரந்துபட்ட தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் நாட்டின் நிலைவரம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவிலான மீட்சியைக் காண்பித்தது. அரசாங்கத்தினாலும், மத்திய வங்கியினாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வலுவான கொள்கை சீராக்கங்களும், கட்டமைப்பு மறுசீரமைப்புக்களும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்குப் பெரிதும் பங்களிப்புச்செய்தன. நெருக்கடி மேலும் தீவிரமடையாமல் தடுப்பதற்கும், பொருளாதாரத்தை நிலையான மீட்சிப்பாதையில் முன்கொண்டுசெல்வதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாக இருந்தன.
பொருளாதார மறுசீரமைப்பு செயற்றிட்டமானது கடந்த ஆண்டிலேயே நம்பிக்கைக்குரிய பெறுபேறுகளைத் தந்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டில் மிக உயர்வான மட்டத்தில் பதிவான பணவீக்கம், கடந்த ஆண்டின் இறுதியில் ஒற்றை இலக்க மட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டு, நாணயக்கொள்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்குப் பங்களிப்பு செய்தது.
தொடர்ந்து 6 காலாண்டுகளாக பதிவான பொருளாதார சுருக்கம் முடிவுக்கு வந்து, 2023இன் இரண்டாம் அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி பதிவானது.
அரச வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு பற்றாக்குறை என்பன சீரடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. 2022இல் மிக மோசமான சரிவைச் சந்தித்த வெளிநாட்டுக் கையிருப்பு 2023இல் மீளக்கட்டியெழுப்பப்பட்டது. இத்தகைய முன்னேற்றங்களை அடுத்து 2023 மற்றும் 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது.
அதேவேளை 2023இன் இரண்டாம் அரையாண்டில் அவதானிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டத்தின் கீழான தொடர் மறுசீரமைப்புக்களால் உந்தப்பட்டு எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு அதிகரித்தல், வெளிநாட்டு நிதி உட்பாய்ச்சல்கள் இயல்புநிலைக்குத் திரும்புதல், அரசாங்கத்தின் வெளிநாட்டுப்படுகடன் சொத்துப்பட்டியல் மறுசீரமைப்பு பூர்த்தியடைதல் என்பவற்றின் ஊடாக வெளிநாட்டுத்துறை உறுதிப்பாடு தொடர்ந்து தக்கவைக்கப்படுமெனவும் நம்புகின்றோம்.
எது எவ்வாறெனினும் இலங்கையின் பொருளாதார மீட்சியானது இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்புக்களின் தொடர்ச்சித்தன்மையிலேயே தங்கியிருக்கின்றது. எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முக்கிய மறுசீரமைப்புக்களிலிருந்து பின்வாங்குவதானது, நாட்டை பொருளாதாரத்தை ஸ்திரமற்ற நிலையின் எல்லைக்குக் கொண்டுசெல்லும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.