சுற்றுலாத்துறை தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. அந்நிய செலாவணி தொடர்பில் மிகவும் அவதானத்துடன் மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையிலேயே இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்து வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்குமாறு சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்பித்ததாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல, அரச உத்தியோகத்தர்களுக்கும் சுங்க வரியின்றி வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் செயற்பாடாகும். எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட அந்நிய செலாவணி நெருக்கடிகளால் இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும், சுற்றுலாத்துறைக்காக மாத்திரம் 1,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மிகவும் அவதானத்துடன் அந்நிய செலாவணி தொடர்பில் மதிப்பாய்வு செய்த பின்னரே இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் சபாநாயகர் இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்தாரா என்பது எனக்குத் தெரியாது என்றார்.