நடிகர் ராகவா லாரன்ஸ், பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்பட இருக்கிறார். செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன.
முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது, “இரண்டு மாதம் முன் எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
அதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான், அதைச் செய்யப்போகிறேன்.
இதைச் செய்யப்போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன்.
செஃப் வினோத், மாற்றம் மூலம் என்ன செய்யப்போகிறீர்கள் என்றார்.
‘மக்களைத் தேடிப்போய் குறைகள் கேட்டு வரப்போகிறேன்’ என்றேன்.
‘போகும் போது சொல்லுங்கள், அதற்கான சாப்பாட்டை கவனித்துக் கொள்கிறேன்’ என்றார்.
அவருக்கு கடவுள் மனது. அறந்தாங்கி நிஷா, இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
நண்பர் எஸ். ஜே. சூர்யாவிடம், மாற்றம் பற்றி சொன்னேன். நானும் அதில் இணைகிறேன் என்றார்.
இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம்” என்றார்.
எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “ராகவா லாரன்ஸ் பல போராட்டங்களைத் தாண்டிதான், இந்தளவு வளர்ந்து வந்திருக்கிறார்.
இத்தனைத் தடைகளைத் தாண்டி வளர்ந்து வந்த பிறகு, எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் வருவது மிகப்பெரியது.
அதை 25 வருடங்களாக செய்து வருகிறார். அவரின் சொந்த முயற்சியில் சொந்தப் பணத்தில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் வளர்த்த குழந்தைகள் இன்று வளர்ந்து பலருக்கு உதவி செய்கிறார்கள்.
அவரின் இந்த ‘மாற்றத்’தில் நானும் இணைந்து கொள்கிறேன் என்றேன். சந்தோஷமடைந்தார்” என்றார்.