தீய சக்தி Vs மறைந்து போன ‘நல்ல’ ஆத்மாவுக்கு இடையிலான சண்டையில் சில திகிலூட்டும் சம்பவங்களையும், நகைச்சுவையையும் சேர்த்தால் ‘அரண்மனை 4’ ரெடி.
நேர்மையான வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி) தன்னுடைய அத்தையுடன் (கோவை சரளா) வாழ்ந்து வருகிறார். அவருடைய தங்கை செல்வி (தமன்னா) தற்கொலை செய்து கொண்டதாக சரவணனுக்கு தகவல் சொல்லப்பட்டுகிறது. முன்னதாக, செல்வியின் கணவரும் நெஞ்சுவலியால் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. உடனே தனது அத்தையை அழைத்துக்கொண்டு, தங்கை தங்கியிருந்த அரண்மனைக்குச் செல்லும் சரவணன், அவரது குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்.
இதனிடையே, திடீரென உடையுதாம்… சாயுதாம் என அந்த அரண்மனையில் சில அமானுஷ்யங்கள் நடக்க, உண்மையில் தங்கை செல்வியும், அவரது கணவரும் இறந்தது எப்படி? அமானுஷ்யங்களுக்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் சரவணன், அந்த வீட்டில் பறிபோக இருந்த ஓர் உயிரை எப்படி காப்பாற்றினார் என்பது படத்தின் திரைக்கதை.
அநியாயமாக கொல்லப்பட்ட ஒருவர் பேயாக வருவது, தீய சக்திக்கும் அவருக்குமான போராட்டம், கோயில் திருவிழா, அம்மன் பாடல், இடையிடையே நகைச்சுவையையும், அச்சுறுத்தும் காட்சிகளையும் சொருகுவது என நூற்றாண்டு கால ‘பேய்’ படங்களை தொகுத்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. இம்முறை கவர்ச்சி, குத்துப் பாடல், காதலை தவிர்த்து, ‘திகில்’ தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ஃபேமிலி’, ‘குழந்தைகள்’ ஆகியோரை குறிவைத்திருப்பது நல்ல யுக்தி.
கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ், சேஷூ, மொட்டை ராஜேந்திரன் என நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே இருந்தபோதிலும், காமெடி கானல் நீராக காட்சியளிக்கிறது. தொடக்கத்தில் நகைச்சுவை இருப்பதாக நம்பவைக்கப்பட்டாலும், காட்சி முடியும்போது காணாமல் போகிறது. மிகச் சில இடங்களில் புன்முறுவலும், இறுதியில் வரும் ‘அவேஞ்சர்’ தீம் நகைச்சுவை மட்டும் சிரிப்புக்கு உத்தரவாதம். திறமையான கலைஞர் கோவை சரளா இன்னும் ‘காஞ்சனா’ பட ஸ்லாங்கையை பின்பற்றுவதை ரசிக்க முடியவில்லை.
கொலை, மர்மம், அமானுஷ்யம் என இடைவேளைக்கு முன்பான திரைக்கதை ஓரளவுக்கு அயற்சியில்லாமல் நகர்ந்தபோதிலும், அதன்பிறகான தமன்னாவின் ப்ளாஷ் பேக் காட்சியில் பில்டிங்கை பிடித்து தொங்கி ஒற்றை ஆளாக ஸ்டண்ட் செய்வது, தீய சக்தி என சொல்லப்படும் பேயுடன் சுந்தர்.சி ‘ஒன் டூ ஒன்’ சண்டை போடுவதெல்லாம் ‘கிறிஞ்’ வகையறா.
தங்கைப் பாசமும், தாய்ப் பாசமும் சென்டிமென்ட்டுக்காக இருந்தபோதிலும், இரண்டிலுமே ‘உயிர்’ இல்லாததால் சாந்தியற்ற ஆத்மாவாக அலைகிறது. பார்த்து பழகிய கதைக்களம் என்பதால் காட்சிகளை எளிதில் யூகித்துவிட முடிகிறது. அதனாலேயே ‘ஜம்ப் ஸ்கேர்’ தருணங்களைத் தவிர்த்து கதையோட்டத்தில் சுவாரஸ்யம் கிட்டவில்லை. இறுதியில் இரு பழம்பெரும் நடிகைகளின் ‘அம்மன்’ பாடல் நடனம் ‘டெம்ப்ளேட்’ என்றாலும் திரையரங்கை ஆர்ப்பரிக்க வைக்கிறது.
தனது வழக்கமான நடிப்பை அழுத்தமாக பதிய வைக்கிறார் சுந்தர்.சி. சொல்லப்பட்டதை திறம்பட செய்திருக்கிறார் தமன்னா. ஆனால், அவருக்காக எழுதப்பட்ட காட்சிகளில் அத்தனை செயற்கைத்தனம். ராஷி கண்ணாவுக்கு படத்தில் என்ன வேலை என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
வினய், ஆர்யா, சித்தார்த்துக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு சந்தோஷ் பிரதாப்புக்கு காட்சிகள் இல்லை. கோவை சரளா, யோகிபாபு, சேஷூ, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அச்சுறுத்தும் சூழலை தனது பின்னணி இசையில் உருவாக்க முயன்றிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. பாடல்கள் தாக்கம் செலுத்தவில்லை. கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும், இறுதி திருவிழாக் காட்சியும் நேர்த்தி. முடிந்த அளவுக்கு தன்னுடைய படத்தொகுப்பில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் ஃபென்னி ஆலிவர். படத்தின் கலை ஆக்கம் கவனிக்க வைக்கிறது. சிஜி ஆங்காங்கே அப்பட்டமாக தெரிவதை உணரலாம்.
“இனி அதை எந்த மனித சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது… தெய்வ சக்தியாலதான் காப்பாத்த முடியும்” என்கிற வசனமே படத்தின் அடுத்த பாகத்துக்கான லீட் கொடுக்கும் முயற்சிக்கு பதிலாக அமைகிறது.