சினிமாவில் டெக்னிக்கல் புரட்சி: இயக்குநர் கே.ரங்கராஜ் பேட்டி

தமிழ் சினிமாவில், எண்பதுகளில் பிஸி இயக்குநராக இருந்தவர் கே.ரங்கராஜ். பாரதிராஜாவிடம் சினிமா பயின்ற இவர், மோகன் நடித்த ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘உயிரே உனக்காக’, முரளி நடித்த ‘கீதாஞ்சலி’, விஜயகாந்த் நடித்த ‘நினைவே ஒரு சங்கீதம்’ உட்பட பல ஹிட் படங்களை இயக்கியவர்.
இவர், இப்போது இயக்கியிருக்கும் படம், ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’. ஸ்ரீகாந்த், பூஜிதா, பரதன், நிமி இமானுவேல் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியாகி இருக்கிறது. இயக்குநர் கே.ரங்கராஜிடம் பேசினோம்.

“காதல் எப்போதும் எல்லோரையும் டச் பண்ற விஷயம். அதுக்கு மொழி, இனம், நாடுன்னு எதுவுமில்லை. அது உணர்வு சம்மந்தப்பட்டது. அதனாலதான் எல்லா நாடுகள்லயும் காதல் படங்களுக்குத் தனி வரவேற்பு இருக்கு. நான் இயக்கி இருக்கிற ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படமும் அப்படித்தான். காதலை வேறொரு கோணத்துல சொல்லியிருக்கேன்” என்கிறார் கே.ரங்கராஜ்.

நிறைய காதல் படங்கள் வந்திருக்கு… இதுல, என்ன வித்தியாசத்தை பார்க்கலாம்?

இது ரொமான்டிக் காமெடி படம். உண்மையான காதல் எதுங்கறதை இந்தப் படம் புரிய வைக்கும். அது எப்படிங்கறதுதான் திரைக்கதை. ரெண்டு கோணங்கள்ல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. த்ரில்லர் விஷயங்களும் படத்துல இருக்கும். இன்றைய மனிதன் பணத்தைத் தேடிதான் அலைஞ்சிட்டிருக்கான். வாழ்க்கைக்கு அதுமட்டுமே போதுமா?ங்கறதையும் படம் பேசும். இந்தக்கதைக்குப் பொருத்தமான ஒரு ஹீரோ தேவைப்பட்டார்.

ஸ்ரீகாந்தை தேர்வு பண்ணினோம். ஒரு கோடீஸ்வர வீட்டுல குதிரை பயிற்சியாளரா அவர் கேரக்டர் இருக்கும். ஹீரோயினா, பூஜிதா நடிச்சிருக்கார். இன்றைய நவீன காதலை இந்தப் படம் சொல்லும்.

ரொமான்டிக் காமெடின்னு சொன்னீங்களே?
உண்மைதான். படத்துல நிறைய காமெடி நடிகர்கள் இருக்காங்க. ஆரம்பத்துல இருந்தே கலகலப்பா போகும்.
சச்சு, நளினி, சுஜாதா, சிங்கம் புலி,ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன்னு நிறைய பேர் இருக்காங்க. எல்லோரும் காமெடி பண்ணுவாங்க. கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ் முக்கியமான கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க. இவங்களோட, தயாரிப்பாளர் மை இண்டியா மாணிக்கமும் வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சிருக்கார்.

இந்தப் பட வாய்ப்பு கிடைச்சது எப்படி?
என் நண்பர் ஒருவர் படம் தயாரிக்கலாம்னு முன் வந்தார். நான்தான் இயக்கணும்னு சொன்னார். கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படி ஆரம்பிச்சது
தான் இந்தப் படம். பிறகு, மை இண்டியா மாணிக்கம் அவர்கிட்ட இருந்து படத்தை வாங்கி தயாரிச்சார். பிஎன்சி கிருஷ்ணா வசனம் எழுதியிருக்கார். டி.தாமோதரன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ஆர்.கே.சுந்தர் இசை அமைச்சிருக்கார்.

15 படங்கள் ஹிட் கொடுத்த இயக்குநர் நீங்க… திடீர்னு படங்கள் இயக்காததுக்கு என்ன காரணம்?
நான் சொந்தமா தயாரிச்ச படங்கள்தான்காரணம். கடன் வாங்கி தர்மம் வெல்லும் எல்லைச்சாமி உட்பட 6 படங்கள் தயாரிச்சேன். சில படங்கள் ரொம்ப நஷ்டமாச்சு. ஒரு கட்டத்துல சினிமாவை விட்டு விலகிட்டேன். விலகுனாலும் எங்க போயிட முடியும்? அதனால மெகா தொடர்கள் பக்கம்
போனேன். நிறைய தொடர்கள் இயக்கினேன். அது இன்னொரு அனுபவத்தைக் கொடுத்துச்சு.

ஒரு சீனியர் இயக்குநரா, இன்றைய சினிமாவை எப்படி பார்க்குறீங்க?
டெக்னிக்கலா ரொம்ப முன்னேறி இருக்கு. நாங்க படம் பண்ணும்போது டிஜிட்டல் இல்லை. டி.ஐ, விஎஃப்எக்ஸ் எல்லாம் அப்ப இல்லை. அதனால, போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு ஒரு மாதம் போதுமானதா இருந்தது. இப்ப அதுக்கு மூனு மாசம் ஆகுது. படத்தை ரொம்ப டீட்டெய்லா கொடுக்க முடியுது. இந்த டெக்னிக்கல் விஷயங்களை பெரிய புரட்சின்னே சொல்லலாம்.
இப்ப இருக்கிற நடிகர்கள், இயக்குநர்களைக் கவனிக்கிறீங்களா?
கவனிக்காம எப்படி இருக்க முடியும்? தொடர்ந்து கவனிச்சுட்டு வர்றேன். நடிகர்கள்னா, ஒவ்வொருத்தர்ட்டயும் ஒவ்வொரு திறமை இருக்கு. இயக்குநரா ஏ.ஆர்.முருகதாஸ், கிரைம், மெலோடிராமா மிக்ஸ் பண்ணி கொடுக்கிறது நல்லாயிருக்கு. அட்லி, சுவாரஸ்யமா கதை சொல்றார். ஏற்கெனவே சொன்ன விஷயங்கள் அவர் கதைகள்ல இருந்தாலும் அதை ரசிக்கும்படியா சொல்றது பிடிச்சிருக்கு.

Related posts