பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளது.
இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் அவரைக் கோவை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
முன்னதாக, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கைது செய்தனர்.
அவரை தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.
இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்து சவுக்கு சங்கரை மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்ல போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.