மதுரையில் வசிக்கும் வெள்ளந்தி மனிதர் வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்). அவருக்கு தேவி (வெண்பா), ப்ரியா (ப்ரியதர்ஷினி) என 2 மகள்கள்.
இளைய மகள் ப்ரியா ‘நீட்’ பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருகிறார்.
ஒருநாள் வீட்டுக்குத் திரும்பாமல் போக, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
அது, கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்க, ரகசியமாக மகளைத் தேடத் தொடங்குகிறார், வீரபாண்டி. தேடலில் அவர் மேற்கொண்ட அதிரடிகள் என்ன? மகள் கிடைத்தாரா என்பது கதை.
நீட் கோச்சிங், உள்ளூர் கட்சி அரசியல், அதற்குள் உலவும் பண, அதிகார வேட்கைக் கொண்ட ‘அடித்தட்டு அரசியல்வாதிகள்’ என்ற பின்புலத்தில் க்ரைம் த்ரில்லர் படமாகத்தர முயன்று அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத்.
வீரபாண்டி கதாபாத்திரத்தின் அறிமுகம்,சாதுவான அவர்தான், காடு கொள்ளாத அளவுக்கு மிரண்டாரா என்கிற கேள்விக்கான பதில், தனக்குக் கிடைத்த களத்தை இரு பரிமாணம் கொண்ட நடிப்பின்வழி எம்.எஸ்.பாஸ்கர் கையாண்டிருக்கும் விதம் என ஈர்ப்பான அம்சங்கள் இருக்கின்றன.
அதேபோல், அரசியல்வாதி நமோ நாராயணனின் வாகன ஓட்டி செல்வமாக வந்து, கதையின் திருப்பங்களில் பங்கெடுத்திருக்கும் கார்த்திக் சந்திரசேகரின் அட்டகாசமான நடிப்பு, எம்.எஸ்.பாஸ்கருக்கு இணையான ரசனை மிகு பங்களிப்பு.
சில திருப்பங்களைத் தவிர, கதையின் போக்கும் விரியும் காட்சிகளும் எளிதில் யூகித்துவிடும் விதமாக இருப்பது படத்தின் சிக்கல்.
குறிப்பாக, மாணவி ப்ரியா வீடியோ எடுத்ததாகச் சொல்லப்படும் காட்சியில் அவரது கோபம், ஒரு சாமானியக் குடும்பத்தின் வறிய நிலை உருவாக்கிய வலியிலிருந்து பிறப்பது என்ற உணர்வைக் கடத்தத் தவறிவிடுகிறது.
‘ரஷோமான் பட விளை’வை திரைக்கதையில் விசாரணைப் பகுதிகளுக்குப் பயன்படுத்திய விதம் ரசிக்கும் விதமாக இருக்கிறது.
அதேநேரம், இந்த உத்தியைப் பயன்படுத்தும்போது, நிகழ்ந்த சம்பவத்தைத் தங்கள் கோணத்தில் விவரிக்கும் கதாபாத்திரங்களின் செயல்கள், கதையை முன்னகர்த்திச் செல்லும் வெவ்வேறு திருப்பங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
பார்த்த சம்பவத்தையே திரும்பவும் பார்க்கிறோமோ என்கிற உணர்வு ஏற்படும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. இதிலும் கோட்டை விட்டிருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும்.
கூட்டமாகத் தெரியவேண்டிய பல காட்சிகளுக்கு அவசியமான துணை நடிகர்களின் எண்ணிக்கை, போதுமான அளவு இல்லாதது சட்டங்களில் வெறுமையாக இருக்கிறது.
சரவெடி சரவணன் அமைத்துள்ள ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் ஒழுங்கமைதி வீரபாண்டி கதாபாத்திரத்துக்குப் பொருந்தினாலும் அதிலிருக்கும் குரூர வன்முறையைத் தவிர்த்திருக்கலாம்.
திரைமொழிக்கு அவசியமான ‘எக்ஸிக்யூஷன்’ சுமாராக இருந்தாலும், கதை, ஈர்க்கும் திருப்பங்கள், நடிகர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் அக்கரன் பார்க்க ஏற்ற படமாகவே நகர்கிறது.