ஹமாஸுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 34,596 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77,816 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. அதோடு, நிறைய மக்கள் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் மத்திய காசாவில் உள்ள ஒரு பகுதியில் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கி வருகின்றன.
இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நெதன்யாகுவுடன் காசா பற்றி தொலைபேசியில் விவாதித்துள்ளார். ஜெர்மன் அரசாங்கத்தின் அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் குறித்து ஷோல்ஸும் நெதன்யாகுவும் தொலைபேசி அழைப்பில் விவாதித்துள்ளனர். ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கும் முயற்சிகள் மற்றும் போர் நிறுத்தம் பற்றி அவர்கள் பேசினர். காசா பகுதியில் உள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், காசா மீதான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான பல அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு அமெரிக்கர்கள், இங்கிலாந்து அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில், “ஈரான் நிதி மற்றும் வங்கி அமைப்புகளில் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகளைத் தடுப்பது, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிகார வரம்பிற்குள் உள்ள சொத்துகளை முடக்குவது, அத்துடன் விசா வழங்குதல் மற்றும் ஈரானிய எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பது ஆகியவை அடங்கும்” என்று ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.