பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சி செய்துவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
இலவசக் கல்வி என்பது நாட்டில் உள்ள அனைவரும் அனுபவிக்கும் ஒன்று. தொடர்ந்து 85 வருட காலமாக இந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன், கஷ்டப் பிரதேசங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்கு பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வி பெரும் உதவியாக அமைந்திருந்தது. இந்த உரிமைக்கு இப்போது சவால் விடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் கடுமையான மாற்றங்களை மேற்கொள்ளும் முன்மொழிவுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இந்த முன்மொழிவுகளின் சாராம்சம் தான் உயர்கல்வித் துறையிலிருந்து அரசு விலகுவதாகும். உயர்கல்விக்கான பொறுப்பை நேரடியாக ஏற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை. எனவே இதனால் உள்ளோர் இல்லாதோர் இடைவெளி கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இளைஞர்களின் விரக்திப் போக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அரசாங்கம் கொண்டு வந்துள்ள பிரேரணைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பின் கல்வித் தரத்தைப் பாதுகாப்பது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல.
அத்துடன், வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கி, அவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறச் செய்து, அவர்களுக்கு இலங்கையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது.
இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முயற்சியை முறியடிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். உயர்கல்வியை இல்லாதொழிக்க இந்த மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்திற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.