2 மணி நேரம் பெரும்பாலும் போரடிக்காமல் நகர்ந்துகொண்டேயிருக்கும் ‘சூப்பர் நேச்சூரல்’ படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கான தேர்வாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது ‘ஷைத்தான்’ (Shaitaan) இந்தி படம். குஜராத்தியின் ‘வஷ்’ படத்தின் தழுவல்தான் இந்தப் படம்.
குடும்பத்தின் மீது பேரன்பு கொண்ட கபீர் ரிஷி (அஜய் தேவ்கன்) தனது மனைவி ஜோதி (ஜோதிகா), மகள் ஜான்வி (ஜான்கி போடிவாலா) மகன் துருவ் (அங்கத் ராஜ்) ஆகியோருடன் ஓய்வுக்காக தனது பண்ணை வீட்டுக்குச் செல்கிறார். காரில் பயணம் மேற்கொள்ளும் அவர்கள், வழியில் ‘தாபா’ ஒன்றில் சாப்பிட வண்டியை நிறுத்துகின்றனர். அங்கே வனராஜ் (மாதவன்) என்பவர் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி புரிந்து, நட்பாகிறார். அந்த கேப்பில் அவர் கொடுக்கும் இனிப்பை சாப்பிடும் ஜான்வி முழுமையாக வனராஜின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறார்.
விடாது துரத்தும் கருப்பாக, பண்ணைவீட்டுக்கும் வரும் வனராஜ், ஜான்வியை ஆட்டிப்படைப்பது மட்டுமல்லாமல், அவரை தனக்கு தத்துக்கொடுக்கும்படி கேட்க, பெற்றோர்கள் அதிர்ச்சியடைகின்றனர். பெற்றோருக்கும், வனராஜுக்கும் இடையிலான போராட்டத்தில் ஜான்வி மீட்கப்பட்டாரா? பறிக்கப்பட்டாரா? வனராஜின் பிண்ணனி என்ன? – இதுதான் திரைக்கதை.
பெரும் இடிக்கு முன் பெய்யும் சிறு மழையின் தொடக்கத்தைப் போல, கபீரின் குடும்பம், அவரின் அழகிய வாழ்க்கை, உரையாடல் என மெதுவாக தொடங்கும் படம் வனராஜின் வருகைக்குப் பிறகு மிரட்டுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள், அரங்கேறும் களேபரங்கள் என பெரும்பாலான படத்தை விறுவிறுப்பான திரைக்கதையை நம்பி, அயற்சியில்லாமலும் நகர்த்தியிருக்கிறார்கள்.
அடுத்து என்ன என்ற ஆவலைக் கூட்டும் படத்தில், ரிபீடட் காட்சிகள் இல்லாதது எங்கேஜிங் தன்மைக்கு உத்தரவாதம். உருவகேலிக்கு எதிரான வசனத்தை சிறுவன் பேசுவது, அறிவியலைக் கொண்டு அமானுஷ்யத்தை அணுகுவது பாராட்டத்தக்கது.
தேர்ந்த நடிகர்களின் தேர்வும், திரைக்கதையும் தான் படத்தின் ஒட்டுமொத்த ஆன்மா. அந்த வகையில் சாக்லேட் பாய் என்ற கதாபாத்திரங்களுக்கு பெயர் போன மாதவன் ‘வனராஜ்’ கதாபாத்திரத்தை அசுரத்தனத்துடன் அசால்ட்டாக கையாண்டிருக்கிறார். மிகை நடிப்போ, அமானுஷ்யங்களையும், மாயாஜாலங்களையும் நிகழ்த்தும் மந்திரவாதியைப்போல அல்லாமல், சாதாரண மனிதாராக, குரூரத்தை வெளிப்படுத்தும் ஒருவராக நடிப்பில் ஈர்க்கிறார்.
ஜான்வி’யாக நடித்துள்ள ஜான்கி போடிவாலா, வனராஜின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் அதேசமயம், அதற்கு மாறான உள்ளுணர்வையும் வெளிப்படுத்த வேண்டிய நிலையில், இரண்டையும் அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார்.
செய்வதறியாது தவிக்கும் தந்தையாக அஜய் தேவ்கனின் போராட்டமும், முயற்சிகளும், தவிப்பும் இறுதியில் பெற்றோர்கள் குறித்து அவர் பேசும் வசனமும் கவனம் பெறுகிறது. அழுதுகொண்டேயிருக்காமல் ஆக்ஷனில் இறக்கும் ஜோதிகா ‘தாயை விட வலிமையான சக்தி எதுவுமில்ல’ என்பதை நிரூபிக்கிறார்.
பின்னணி இசையும், ஒலிக்கோர்வையும், ஹாரர் படத்துக்கான உணர்வுகளை கோர்த்து உயிரூட்டுகிறது. அதேபோல சுதாகர் ரெட்டியின் ஒளிப்பதிவும், வேகமாக படத்தை கடக்க உதவும் சந்தீப்பின் கட்ஸும் படத்துக்கு ப்ளஸ். லாஜிக்கை பற்றி யோசித்து நேரத்தை வீண்டிக்காமல் விறுவிறுப்புடன் நகரும் கதையுடன் பயணிப்பவர்களுக்கு ‘ஷைத்தான்’ மிரட்டலாம்!